மும்பை: அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் மனைவியுடன் பயணித்த 80 வயது முதியவர் ஒருவர் வீல் சேர் கிடைக்காததால் 1.5 கி.மீ., தூரம் நடந்து சென்றார். இதனால், மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் இந்திய அமெரிக்கா வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்க பாஸ்போர்ட் வைத்துள்ளார். நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு மனைவியுடன் வர டிக்கெட் முன்பதிவு செய்தார். அப்போதே, தங்களுக்கு வீல்சேர் தேவை எனக்குறிப்பிட்டு இருந்தார்.
இதன்படி கடந்த திங்கட்கிழமை ( பிப்.,12) அன்று மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் போதிய வீல் சேர் இல்லை என தெரிகிறது. அவரது மனைவிக்கு மட்டும் வீல் சேர் வசதி செய்யப்பட்டது. முதியவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி ஊழியர்கள் கூறினர். ஆனால், மனைவியை தனியாக அனுப்ப விரும்பாத அந்த நபர், நடந்தே வருவதாக கூறினார்.
மனைவி வீல் சேரில் செல்ல, அவர் சுமார் 1.5 கி.மீ., தூரம் மெதுவாக கூடவே நடந்தே சென்றுள்ளார். விமான நிலையத்தில் குடியேற்ற சோதனை மையம் அருகே வந்த போது, முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு, நானாவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், முதியவர் வந்த விமானத்தில் மொத்தம் 32 பேர் வீல் சேர் தேவை எனக்குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், 15 வீல் சேர்கள் மட்டுமே தயார் நிலையில் இருந்தன என தெரிவித்தன.
ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வீல் சேர்களின் தேவை அதிகமாக இருந்ததால், அந்த பயணியை சிறிது நேரம் காத்திருக்கும்படி தெரிவித்தோம். ஆனால், அவர் மனைவியுடன் நடந்தே வருவதாக தெரிவித்தார். அவர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம். அவரின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement