‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரைக் கூட்டம் நடத்த தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கான பரப்புரைக் கூட்டம் இன்று மாலை, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையப் பகுதியில் நடைபெறவிருக்கிறது. கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், ‘அரக்கோணம் தொகுதியின் சிட்டிங் எம்.பி ஜெகத்ரட்சகன் பங்கேற்கமாட்டார்‘ என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அரக்கோணம் தொகுதிக்குள், ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், வேலூர் வருவாய் மாவட்டத்திலுள்ள காட்பாடி, திருவள்ளூர் வருவாய் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.
இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல், தொகுதிக்குச் சம்பந்தமில்லாத பிரமுகர்கள்கூட அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பரப்புரைக் கூட்ட அழைப்பிதழிலும் அவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், எம்.பி ஜெகத்ரட்சகனின் பெயர் அழைப்பிதழிலும்கூட இடம் பெறாதது, தி.மு.க-வினரிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தருமபுரியில் நடைபெறும் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டத்தில்தான் ஜெகத்ரட்சகன் கலந்துகொள்கிறார். அப்படியிருக்க, இன்று நடைபெறும் கூட்டத்துக்கு உள்ளூர் சிட்டிங் எம்.பி என்ற அளவில் கூட அவர் அழைக்கப்படாதது ஏன்? என்கிற கேள்விக்குப் பின்னால், பல்வேறு உள்ளூர் அரசியல் காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதுசம்பந்தமாகப் பேசுகிற ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘சிட்டிங் எம்.பி ஜெகத்ரட்சகணிடம் இருந்து, அரக்கோணம் தொகுதியை கைபற்றும் வேலையில் அமைச்சர் காந்தி மும்முரம் காட்டி வருகிறார் என்கிறார்கள். ‘எம்.பி சீட்’ கனவில் இருக்கும் மகன் வினோத் காந்தியின் விருப்பத்துக்காக அமைச்சர் காந்தி தன் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார் என்கிறார்கள்.
தருமபுரி சிட்டிங் எம்.பி செந்தில்குமாருக்கு மீண்டும் சீட் வழங்க தலைமை யோசிப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தத் தொகுதிக்கு ஜெகத்ரட்சகனை மாற்றிவிட அமைச்சர் காந்தி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறாராம்.
இதனிடையே, ‘சிட்டிங்’ எம்.பி ஜெகத்ரட்சகன் ஜாதகத்தின்மீதும், ஆன்மிகத்தின்மீதும் மிகுந்த நம்பிக்கைக்கொண்டவர். 1999, 2009, 2019 என ஒன்பதில் முடியும் ஆண்டுகளில்தான், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். வரக்கூடிய தேர்தல், இரட்டை இலக்க ஆண்டில் நடைபெறவிருப்பதால், சென்டிமென்ட்டாக வேறு தொகுதிக்குத் தாவும் முடிவில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. எனினும் அவர் வேலூர் தொகுதியை தான் குறிவைப்பதாகவும், தர்மபுரி தொகுதிக்கெல்லாம் அவர் மாற மாட்டார் என்ற தகவல்களும் பரபரக்கிறது.
தருமபுரி, ஆரணி, அரக்கோணம் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளும் வன்னியர் சமூக வாக்குவங்கியை மையப்படுத்தியே வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கிறது. ஜெகத்ரட்சகன் அரக்கோணத்தில் மூன்று முறை பெற்ற வெற்றி பெற்றதில் சமூக வாக்கு வங்கி கணக்கும் முக்கியமாக இருக்கிறது.
இந்தமுறை தருமபுரி தொகுதி தி.மு.க-வுக்கு சவாலானதாக இருக்கும் என ரிப்போர்ட் சென்றிருப்பதால், அங்கு பிரபலமான முகமாக இருக்கும் ஜெகத்ரட்சகனைக் களமிறக்கி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காகத்தான் அங்கு நாளை நடக்கும் பரப்புரைக் கூட்டத்துக்கும் சிறப்புரை ஆற்றச் செல்கிறார் ஜெகத்ரட்சகன். ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதிக்குள் நடக்கும் கூட்டத்தில் இல்லாததை பயன்படுத்தி, மகன் வினோத் காந்தியை முன்னிறுத்துவதற்கான வேலைகளையும் செய்யத் தொடங்கியிருக்கிறார் அமைச்சர் காந்தி என்கிறார்கள்.’’ என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY