மேகேதாட்டுவில் அணை கட்ட தயாராகும் கர்நாடகா: தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்டத் தயாராகும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதி தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில முதல்வரால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மேகேதாட்டு அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே தனியாக ஒரு திட்ட மண்டலம் மற்றும் இரண்டு துணை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அணை கட்டப்படும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பினை அடையாளப்படுத்தும் பணி, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை ஆகியவை ஏற்கெனவே துவங்கப்பட்டுவிட்டதாகவும், தேவையான அனுமதி பெற்ற பின்பு இந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் துவங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமையினை பறிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் வந்ததிலிருந்தே, மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று தொடர்ந்து அம்மாநில முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பேசி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது தமிழ்நாட்டு மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணையை கர்நாடகா கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் காவேரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேகேதாட்டு அணை கட்டப்படாத நிலையிலேயே, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை. மாறாக, உபரி நீர் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில், மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், வருகின்ற உபரி நீரும் வந்து சேராத நிலை உருவாகும். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எனவே, முதல்வர், கர்நாடக முதல்வரிடம் தனக்குள்ள செல்வாக்கினை பயன்படுத்தி, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தவும், தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.