கோவில்பட்டி: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதியம்புத்தூரில் நேற்று முன்தினம் இரவு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. பேசியதாவது:
கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜகரூ. 6,564 கோடி தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. இவ்வளவு நிதி எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது? என்பது தெரியாது. நாட்டிலே பணக்கார கட்சியாக பாஜக உள்ளது. அவர்கள் கொண்டு வந்த சட்டம் தவறானது, செல்லாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மாற்ற முடியாதது எதுவும் இல்லை. மக்கள் நினைத்தால், தமிழர்கள் நினைத்தால், திமுக நினைத்தால் எதையும் மாற்றிக் காட்ட முடியும். இந்த உறுதியோடு தேர்தலில் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் 40 இடங்களையும் திமுக கூட்டணி வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியை எதிர்த்து தேர்தலில் நிற்க அண்ணாமலை தயாரா?. அப்படி அவர் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி விட்டால், அரசியலை விட்டு நான் விலகத் தயார். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைத்து, சில அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐயை வைத்து சோதனை நடத்தினார்கள். யாராலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.