Sivakarthikeyan: `தேசமே சல்யூட் அடித்த இராணுவ வீரன்' – அமரனாக SK; யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?

காஷ்மீரின் யாச்சு குகன் பகுதியில் உள்ள ஒரு ஆப்பிள் தோட்டம் அது. அழகு நிறைந்து தொங்கும் ஆப்பிள்களுக்கிடையே ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை சேர்ந்த அல்தாஃப் பாபா என்கிற தீவிரவாதி பதுங்கியிருக்க, இந்திய இராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைஃபிள் படையணி அந்தப் பகுதியை முழுமையாக சூழ்ந்து நிற்கிறது. இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடக்கிறது.

Mukund

ஒரு கட்டத்தில் அல்தாப் பாபாவின் பக்கத்திலிருந்து துப்பாக்கி குண்டுகள் வெடிக்கவே இல்லை. நம்முடைய இராணுவ வீரர்களுக்கு ஒரே குழப்பம். ஆனால், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

‘கொஞ்சம் காத்திருங்கள்…அவனிடம் ஒரே ஒரு புல்லட்தான் இருக்கிறது. முடிந்தவுடன் இறங்கிவிடலாம்..’ என தன்னுடைய நண்பரும் சக வீரருமான விக்ரம் சிங்கிற்கு மெசேஜ் பாஸ் செய்கிறார். அல்தாப்பின் குண்டுகள் பாய்ந்த நேரத்தையும் எண்ணிக்கையையும் வைத்தே மேஜர் இந்த முடிவுக்கு வந்திருந்தார். அல்தாப் பாபாவுக்கு வேறு வழியில்லை. குண்டுகள் இருக்கும் வரை சண்டை செய்துவிட்டு சாவை எதிர்கொள்ள வேண்டும். கடைசி குண்டும் தீர்ந்தது. மேஜர் வரதராஜனின் படை உள்ளே இறங்கியது. சதி வேலைகளுக்கு திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அல்தாப் பாபாவின் துப்பாக்கிக் குண்டுகளை கணக்கில் கொள்ளாமல் அட்டாக்கில் இறங்கியிருந்தால் இராணுவத்தின் தரப்பிலும் சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும். மேஜர் முகுந்தின் சமயோஜிதமும் அழுத்தமான சூழலில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் திறனும் அதை தவிர்த்திருந்தது. 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்திருந்தது. 2014 ஏப்ரலில் மேஜர் முகுந்த் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Mukund

2015 ஜனவரியில் அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த மேஜர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில்தான் சிவகார்த்திகேயன் இப்போது நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ‘அமரன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தின் டீசர் காட்சிகளிலேயே ’44 ராஷ்ட்ரிய ரைபிள் படை’ பற்றிய வசனங்களும் தீவிரவாதிகளுடனான சண்டையும் அதிரடியாக காட்டப்பட்டிருக்கிறது.

Sivakarthikeyan

2014 ஏப்ரல் 25 ஆம் தேதிதான் மேஜர் முகுந்த் தீவீரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் அவரின் இறப்பு இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அத்தனை பேரும் அவருக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர். முகுந்தின் அப்பா வரதராஜனுக்கு இராணுவத்தில் சேர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அவருக்கு அது கைகூடவில்லை. ஆனால், பி.காம்மும் ஜர்னலிசமும் படித்த அவரின் மகன் முகுந்த் அந்தக் கனவை நனவாக்கினார். சென்னை ஆபிசர்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று இராணுவத்தில் சேர்ந்த முகுந்த் 2011 இல் ஐ.நா.சபை சார்பில் லெபனானுக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையிலும் இடம்பெற்றிருந்தார். மேஜராக தீரத்துடன் சண்டைகளில் பங்கேற்றிருந்த முகுந்த் இறப்பதற்கு முன்பே பல காயங்களை உடம்பில் தாங்கியிருந்தார்.

ஒரு துப்பாக்கிச் சண்டையில் முதுகில் ஒரு குண்டை வாங்கியிருக்கிறார். அறுவை சிகிச்சையில் அந்த குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த சமயத்தில் சுமைகளை தூக்க முடியாமல் சிரமப்பட்ட போதுதான் பெற்றோரிடமும் மனைவியிடமும் உண்மையைச் சொல்லியிருக்கிறார் முகுந்த். அதேமாதிரி, ஒரு முறை கண்ணி வெடியில் காலை வைத்துவிட சகவீரர்களின் உதவியோடு மயிரிழையில் அந்த ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

Mukund Varadarajan

‘நான் கண்ணி வெடிலயே தப்பிச்சவன். எனக்கு ஆயுசு கெட்டி..’ என அப்பாவிடம் அந்த ஆபத்தான தருணத்தையும் ஜாலியாக ஷேர் செய்திருக்கிறார்.

கேம்ப்பிலுமே முகுந்த் கொஞ்சம் ஜாலியான ஆள்தானாம். சக வீரர்களுக்கு பிறந்தநாள் எனில் முந்தைய நாள் இரவே அவர்கள் முன் கேக்கோடு ஆஜர் ஆகிவிடுவாராம். பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக நடிகர் மாதவன் போல இருப்பதால் கேம்ப்பில் நெருங்கிய நண்பர்கள் இவரை மேடி என்றும் அழைப்பதுண்டு.

தேசப்பாதுகாப்புக்கான பணியை உத்வேகத்தோடும் பெருமையோடும் பார்த்து வந்த மேஜருக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி இறுதிநாளாக மாறியது. 2013 ஜூனில் அல்தாப் பாபாவை ஆப்பிள் தோட்டத்தில் சுட்டு வீழ்த்தினார் இல்லையா? அங்கே அவரிடமிருந்து சில பொருள்களையும் கைப்பற்றி வந்திருந்தார். அதில், கோட் வேர்டுகள் நிரம்பிய ஒரு லெட்டரும் அடக்கம். அந்த லெட்டரை தொழில்நுட்ப ரீதியாக செயல்படும் குழுவிடம் கொடுத்து டீகோட் செய்ய சொல்லியிருந்தார். மூன்று மாதங்கள் இந்த வேலை நடந்திருந்தது. தினசரி அது குறித்த அப்டேட்டை கேட்டு தெரிந்துகொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில் தொழில்நுட்ப குழு அந்த கோட் வேர்டுகளை உடைத்துவிட்டது.

சோபியான் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் இருக்கும் வீட்டில் சில தீவிரவாதிகள் தங்கியிருக்கிறார்கள் என்பதுதான் உடைபட்ட செய்தி. மேஜர் ஆப்பரேஷனுக்கு தயாராகிறார். ரகசியமாக அந்த இடம் கண்காணிக்கப்படுகிறது.

Mukund

சம்பவம் நடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அந்த ஸ்பாட்டுக்கு அல்தாப் வாணி வருகிறான். தீவிரவாத குழுவின் முக்கிய கமென்டர்களில் இவனும் ஒருவன். மேஜருக்கு செய்தி கிடைக்கிறது. குழுவினரோடு அந்த இடத்தை முற்றுகையிடுகிறார். அந்த வீடு இருக்கும் காம்பவுண்ட்டில் இன்னும் சில வீடுகள் இருந்திருக்கிறது. பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதால் நேரடியாகக் களத்தில் இறங்காமல் கொஞ்சம் காத்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டைத் தொடங்குகிறார்கள். அப்போதும் மேஜர் நிதானம் காத்தார். நேரம் மாலை 5 மணியைக் கடக்கிறது. இருட்டிவிட்டால் தீவிரவாதிகள் தப்பிவிடுவார்கள் என்பதால் விக்ரம் சிங்கை மட்டும் அழைத்துக் கொண்டு கையில் AK 47 துப்பாக்கியோடு தவழ்ந்து தவழ்ந்து வீட்டை எட்டுகிறார்கள். கையெறி குண்டின் உதவியுடன் முதல் தீவிரவாதியை பிடித்துவிடுகிறார்கள்.

இரண்டாவது தீவிரவாதியை கண்டுபிடித்து சுடும் தருவாயில் விக்ரம் சிங்கின் கழுத்திலும் தாடையிலும் குண்டு பாய்ந்து துடிதுடித்து இறக்கிறார். நண்பன் மறைந்துவிட்டான். நொடிப்பொழுது தாமதமில்லை. அல்தாப் வாணி மட்டும் மிச்சமிருக்கிறான். அவனைத் தேடி விரைகிறார்.

கையெறி குண்டுகள் வீசப்படுகின்றன. அந்தத் திசையை கணக்கில் கொண்டு முன்னேறுகிறார். அல்தாப் வாணியைப் பார்த்துவிட்டார். தாமதமின்றி துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்கின்றன. அல்தாப் வாணி உயிர் பறிக்கப்படுகிறது.

‘மேஜர் முகுந்த் பேசுகிறேன்…அல்தாப் வாணியை கொன்றுவிட்டோம். ஆனால், துரதிஷ்டவசமாக நம்முடைய விக்ரம் சிங்கும் இறந்துவிட்டார்.’ என முகாமிற்கு தகவல் சொல்கிறார்.

Mukund

சண்டை நடந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார். வெளியே முற்றுகையிட்டிருந்த வீரர்கள் முகுந்தை வரவேற்கின்றனர். எல்லாமே நன்றாகவே செல்கிறது. சில நொடிகளிலேயே முகுந்த் சரிந்து விழுகிறார். அல்தாப் வாணியுடனான நேருக்கு நேர் சண்டையில் முகுந்தின் உடலையும் பல குண்டுகள் பதம் பார்த்திருக்கிறது. இரத்தம் பீறிடுகிறது. வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். பலனில்லை. செல்லும் வழியிலேயே மேஜர் வீர மரணம் அடைந்தார். 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது.

‘என்னுடைய கணவருக்கு அழுவதே பிடிக்காது. எப்போதாவது நான் உயிரிழந்துவிட்டால் நீ அழவே கூடாது என சொல்வார்..’ எனக் கூறி பெருமிதம் பொங்கும் சிரிப்போடுதான் முகுந்தின் மனைவி இந்து அவரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்றிருந்தார்.

Mukund

முகுந்தின் 6 வயது மகள் அர்ஷியாவும் துப்பாக்கிச் சத்தம் கேட்டா அப்பா எழுந்தரிச்சுருவாங்க என்கிற நம்பிக்கையோடு இறுதிமரியாதையின் போது துள்ளிக்குதித்து கொண்டிருந்தார்.

ஒரு இராணுவ வீரருக்காக தேசமே சல்யூட் செய்த தினம் அது. அந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதைதான் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’. வித்தியாசமான ஒரு கெட்டப்பில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பிறந்தநாள் வாழ்த்துகள் SK

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.