Manoj Tiwari: "தோனி, என்னை ஏன் அணியிலிருந்து நீக்கினீர்கள்?" – கேள்வி கேட்கும் மனோஜ் திவாரி

இந்திய அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருமான மனோஜ் திவாரி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த மனோஜ் திவாரி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனமும் வைத்திருக்கிறார்.

Dhoni

அவர் பேசியிருப்பதாவது, “2011-ம் ஆண்டில் ஒரு போட்டியில் சதமடித்த பிறகும் என்னை அணியிலிருந்து நீக்கினார்கள். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்’ என தோனியிடம் கேட்க விரும்புகிறேன். ரோஹித்தைப் போல கோலியை போல பெரிய ஹீரோவாகும் அளவுக்கான திறமை என்னிடம் இருந்தது. ஆனால், என்னால் ஹீரோவாக முடியவில்லை. இப்போது நிறைய வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதை தொலைக்காட்சியில் பார்க்கையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.

மேலும் பேசியவர் ஐ.பி.எல் குறித்தும் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதாவது, “ஐ.பி.எல்-ஐ மையப்படுத்திய மனநிலையில்தான் இப்போதுள்ள இளம்வீரர்கள் இருக்கின்றனர். இந்தப் போக்கு ரஞ்சி போட்டியின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது. ரஞ்சி போட்டிகளின் மீதான முக்கியத்துவத்தை அதிகரிக்க பிசிசிஐ இப்போது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Manoj Tiwari

ஐ.பி.எல்-இல் புகழடைந்துவிட்டதால் உள்ளூர் போட்டிகளைத் தவிர்க்கும் சில பெரிய வீரர்களை மனதில் வைத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் அதிக திறமையாளர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நாம் உலகக்கோப்பையில் தோற்கிறோம். நம்முடைய கவனம் முழுவதும் ஐ.சி.சி தொடர்களின் மீதுதான் இருக்க வேண்டும். ரஞ்சி போட்டிகளின் மூலம் வீரர்களை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும்.

BCCI

பிசிசிஐ ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இப்போதோ அரசியல்வாதிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நான் யாருடனும் சண்டைக்குச் செல்ல விரும்பவில்லை. ரஞ்சி போட்டிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் போதும்” என மனோஜ் திவாரி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் திவாரி பேசியது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.