Progress in talks with farmers Temporary suspension of strike | விவசாயிகளுடனான பேச்சில் முன்னேற்றம் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

சண்டிகர், விவசாய விளைபொருட்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட தயாராக இருப்பதாக அரசு தரப்பு தெரிவித்ததை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விவசாய விளை பொருட்களுக்கு சட்ட ரீதியான குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை சமீபத்தில் துவக்கினர்.

ஒப்பந்தம்

அவர்கள், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசு தரப்புக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த மூன்று சுற்று பேச்சில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், நான்காவது சுற்று பேச்சு நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், அரசு தரப்பு முன்வைத்த பரிந்துரையை விவசாய தரப்பினர் பரிசீலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அமைச்சர் பியுஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாப் விவசாயிகளிடம் இருந்து பருப்பு வகைகள், மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட அரசு தயாராக உள்ளதாக விவசாய சங்கத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆதரவு விலை

இந்த ஒப்பந்தத்தில் அரசின் கொள்முதல் அளவுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படாது. கூட்டுறவு சொசைட்டிகளான தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவையுடன் ஒப்பந்தங்கள் போடப்படும் என உறுதி அளித்துள்ளோம்.

பருத்தி விவசாயிகளுடன், இந்திய பருத்திக் கழகம் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தியை கொள்முதல் செய்யும் என்றும் விவசாய சங்கத்தினரிடம் தெரிவித்தோம்.

இது தொடர்பாக, நிபுணர் குழு மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் விவாதித்து இரண்டு நாட்களில் முடிவு அறிவிப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, நாளை வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விவசாய சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

ஆனால், ‘சம்யுக்தா கிஷன்’ என்ற விவசாய அமைப்பு மத்திய அரசின் யோசனையை நிராகரித்து, போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது.

ஆலோசித்து முடிவு

விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தர் கூறியதாவது:அடுத்த இரண்டு நாட்களில் முடிவை அறிவிப்போம். எங்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். இரண்டு நாட்களுக்கு பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் நாளை காலை, 11:00 மணிக்கு மீண்டும் டில்லி நோக்கி நகருவோம். சக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.