திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வரிடம் முறையிட்டு மனு கொடுக்க காவல்துறை அனுமதிக்க வலியுறுத்தி மேல்மா கூட்டுச்சாலையில் 2-வது நாளாக 10 விவசாயிகள் இன்று (பிப்.21) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், 20 விவசாயிகளை முதற்கட்டமாக தமிழக காவல்துறை கைது செய்தது. பின்னர் இரண்டாம் கட்டமாக 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் எதிரொலியாக 7 விவசாயிகளின் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியூர்களை சேர்ந்தவர்கள், அவர்கள் அனைவரும் நிலமற்றவர்கள், சிப்காட் தொடங்க பல விவசாயிகள் ஆதரிக்கின்றனர்” என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் குறும்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கியும், வடஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் உருவபொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் விவசாயிகளுக்கு எதிராக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், மேல்மா சிப்காட் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தி மேல்மா கூட்டுச்சாலையில் இருந்து சென்னை தலைமை செயலகம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட விவசாயிகள் நேற்று (பிப்.20) புறப்பட்டு செல்ல முயன்றனர். அவர்களை, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். விவசாயிகள் சந்திரன், மணிகண்டன், தேவன், பெருமாள், ராஜா, ரேணுகோபால், நேதாஜி, ஏழுமலை, கணேஷ், மாசிலாமணி ஆகிய 10 விவசாயிகள் 2-வது நாளாக இன்றும் (பிப்ரவரி 21-ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், முதல்வரை சந்திக்க காவல்துறை அனுமதிக்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்டும், சிகிச்சைக்கு செல்ல மறுத்ததால் கணேசன், பெருமாள் ஆகிய இரண்டு விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.