ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை…

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (20.02.2024) அலரி மாளிகையில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மேலதிக மின்சாரத்தினை சேர்க்கும் உமா ஓயா நீர்மின் திட்டத்திற்கு ஈரான் அளித்த ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

உமா ஓயா திட்டம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மேலதிகமாக, 50,000 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய 145 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகிறது. இந்த வெற்றிகரமான திட்டம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஈரான் வெளிவிவகார அமைச்சர், எரிசக்தி, நீர், விவசாயம், நனோ தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள் மற்றும் உயிர்தொழில்நுட்பம் ஆகியவற்றில் தங்களது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி எதிர்கால திட்டங்களில் இலங்கையுடன் ஒத்துழைக்க ஈரான் ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையின் தேயிலைக்காக ஈரானின் மசகு எண்ணெய் பரிவர்த்தனை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இலங்கை மசகு எண்ணெய்க்காக ஈரானுக்கு செலுத்த வேண்டியுள்ள 250 மில்லியன் டொலர்களுக்கு பதிலாக இலங்கையில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய ஈரான் இணக்கம் தெரிவித்தது. பொருள் பரிமாற்ற வர்த்தக உடன்படிக்கையின் கீழ் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கிராமிய மின்வழங்கல் திட்டத்திற்கு மேலும் 31 மில்லியன் யூரோ மானியம் வழங்க ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் அமெரிக்க டொலருக்கு பதிலாக ஆசிய நாணயங்களில் வர்த்தக நடவடிக்கையினை மேற்கொள்வது குறித்து பிரதமரும் ஈரான் அமைச்சரும் கவனம்செலுத்தினர். ஈரான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கான வங்கி ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கையுடனும் அவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியின் போதும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இலங்கைக்கு வழங்கிய தாராள ஆதரவிற்கு ஈரானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்த உறவு பரஸ்பர நம்பிக்கை, நட்பு மற்றும் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு ஈரான் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதற்கு தனது பாராட்டுக்களை பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ், பிரதி எரிசக்தி அமைச்சர் மொஜ்டோபா அக்பரி, ஈரான் உதவி அமைச்சர் செயிட் மௌசவி ரசூல், இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன தெனிபிட்டிய, யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.