உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், சட்ட நிபுணர் பாலி எஸ்.நாரிமன் காலமானார்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் மிகப் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரும், அரசியல் சாசன சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரலுமான பாலி எஸ்.நாரிமன் இன்று (பிப்.21) அதிகாலை 12.45 மணியளாவில் காலமானார். அவருக்கு வயது 95.

1929 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பிறந்த அவர் சட்டம் பயின்று சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவர் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு சட்டத்துறை சார்ந்தோரும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று நீதிமன்ற நடவடிக்கை தொடங்கியதுமே நாரிமன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். நேற்றிரவு வரை அவர் அரசியல் சாசன அமர்வு ஒன்றுக்கு நாரிமன் தனது கருத்துகளைப் பதிவு செய்து கொண்டிருந்தார் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

கவனம் பெற்ற வழக்குகள்: பாலி எஸ்.நாரிமன் தனது பணிக் காலத்தில் போபால் விஷவாயு வழக்கு, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, டிஎம்ஏ பை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.

எழுத்துப் பணியில் ஆர்வம் கொண்ட நாரிமன் 1999 நவம்பரில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாரிமனின் மகன் ரோஹின்டன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.