புதுடெல்லி: கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தி உள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உறுதி செய்துள்ளார்.
அக்டோபர், 2024 முதல் செப்டம்பர், 2025 வரையிலான சர்க்கரைப் பருவத்திற்கான நியாயமான விலை நிர்ணயத்துக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 5 கோடி கரும்பு விவசாயிகள் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதை கருத்தில்கொண்டு 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.315.10 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2023-24 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.315 வழங்கப்படுகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டு காலமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பயிர்களுக்கான உரிய விலையை தகுந்த நேரத்தில் விவசாயிகள் பெறுவதை உறுதி செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய சர்க்கரை பருவமான 2022-23ல் 99.5% கரும்பு நிலுவைத் தொகையும், மற்ற அனைத்து சர்க்கரை பருவங்களில் 99.9% கரும்பு நிலுவைத் தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.