கிராமிய விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உதவுங்கள்… – பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி கியூ டொன்கியு (Dr. Qu Dongyu) அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று (2024.02.19) அலரி மாளிகையில் நடைபெற்றது.

பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதார மேம்பாட்டிற்கு அளித்து வரும் ஆதரவிற்காக உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மேலும் ஆதரவளிக்குமாறு உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் (FAO) கேட்டுக்கொண்டார். கிராமிய விவசாயத்திற்கு சக்தி வளத்தை உற்பத்தி செய்யும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகளை நிறுவுவது குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

இவ்வாறான திட்டங்கள் ஆபிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலும் அவ்வாறான திட்டத்தை உணவு மற்றும் விவசாய அமைப்பு பரிசீலித்து வருவதாகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். கலாநிதி கியூ டொன்கியூ இலங்கையின் காலநிலை நிலைத்தன்மையைப் பாராட்டியதுடன், “இந்தத் தீவை இந்து சமுத்திரத்தின் பிரகாசமான நீர்த்துளி என்று அழைக்கலாம்” என்றார். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை பாராட்டிய அவர், குறுகிய காலத்தில் இலங்கை மீண்டும் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஊடக ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர, உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளான கோட்பிரீ மெக்வன்சி, பெத் குரோபர்ட், விமலேந்திர சரண், மெக்சிமோ டொரேரோ மற்றும் என்ஜலினா ஜாகோம் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.