மயிலம் கோயில் கும்பாபிஷேகம்: `முருகனோடு போர் புரிந்த சித்தர்' – திருமணவரம் தரும் தலத்தின் சிறப்புகள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது மயிலம். இங்கு உள்ள குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் முருகப்பெருமான் சுப்பிரமண்யராக வள்ளி தேவசேனா சமேதராக மணக்கோலத்தில் காட்சி அருள்கிறார்.

இந்தத்தலத்தில் முருகப்பெருமான் தேவியரைத் திருமணம் செய்துகொண்டதாகத் தல வரலாறு கூறுகிறது. அந்த அற்புதமான ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்ததத் தலத்தின் சிறப்புகள் குறித்தும் இங்கு வழிபாடு செய்தால் கிடைக்கும் வரங்கள் குறித்தும் அறிந்துகொள்வோம்.

மயிலம் கோயில்

இந்தத் தலத்தில் மயிலே மலையானதாகப் புராணம் சொல்கிறது. அதற்கேற்ப இங்குள்ள மலை காண்பதற்கு மயில் ஒன்று தோகைவிரித்துப்படுத்திருப்பதுபோன்ற எழிலார்த காட்சியாகத் தோற்றமளிக்கிறது.. எனவே இங்கே கோயில் மட்டுமலே மலையே புனிதமானது என்கிறார்கள் பக்தர்கள்.. முருகப் பெருமானிடம் போரில் தோற்ற சூரபத்மன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி… இங்கு வந்து மயில் வடிவ மலையாக மாறிக் கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தில் மகிழ்ந்து முருகன் காட்சி தந்தபோது, ‘‘என்னைத் தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என சூரபத்மன் வேண்டினான். மயிலாக சூரபத்மன் தவமிருந்த தலம் என்பதால் இதற்கு மயூராசலம் என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில் மயிலம் என்றானது என்கிறது தலபுராணம்.

சிவகணத் தலைவரான சங்குகன்னர் புதுவைக்கு அருகே இருக்கும் பொம்மபுரம் (பொம்மையர் பாளையம்) கடற்கரைப் பகுதியில் பத்து வயது பாலனாகத் தோன்றினார். தலங்கள் தோறும் சென்று சைவ நெறி பரப்பினார். பாலனாக இருந்தாலும் சித்தராகவும் திகழ்ந்ததால் அவருக்கு பால சித்தர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. அவர் ஏற்படுத்திய மடமே ‘பொம்மைய பாலசித்தர் மடம்’ என அழைக்கப்பட்டது.

மயிலம் அருள்மிகு முத்துக்குமார சுவாமி

ஒரு நாள் பாலசித்தரைத் தேடி வந்த நாரதர், மயூராசலம் மற்றும் சூரபத்மன் குறித்து எடுத்துக் கூறி, ‘‘நீங்களும் மயிலம் மலையில் முருகனை நோக்கித் தவமிருந்தால் நினைத்த செயல்கள் கைகூடும்!’’ என்று யோசனை சொன்னார்.

அவ்வாறே பாலசித்தர் மயிலம் வந்து முருகனை நோக்கிக் கடும் தவம் புரிந்தார். பிறகு முருகனின் தேவியரான வள்ளி தேவசேனையை எண்ணித் தவம் புரிந்தார். அவரின் தவத்துக்கு மனமிரங்கிய தேவியர் முருகனைப் பிரிந்து மயிலம் வந்து சித்தருக்குக் காட்சி கொடுத்தனர். தங்களை அவர் மகள்களாகப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டினர். அவ்வண்ணமே அவர் பாதுகாத்துவந்தார்.

ஒருநாள் முருகப்பெருமான், ஓர் அரசர் போல வேடமிட்டுவந்து வள்ளிதேவசேனை இருக்கும் மாளிகைக்குள் நுழைய முற்பட்டார். அப்போது பாலசித்தர் அவரைத் தடுக்க இருவருக்கும் இடையே போர் ஏற்பட்டது. சித்தர் கடுமையாகப் போர் புரிந்தார். முருகப் பெருமான் தன் கை வேலை அவர் மீது வீச சித்தர் அந்த வேலையில் பற்றித் தடுத்தார். முருகன் ஞானவேல் கையில் பட்டதும் பாலசித்தருக்கு மாயை விலகியது. வந்திருப்பவர் யார் எனத் தெரியத் தொடங்கியது. முருகனைப் போற்றித் துதித்தார். தேவியரோடு இணைந்து இந்தத் தலத்திலே திருமணக் கோலத்தில் காட்சி தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவ்வண்ணமே முருகனும் வரம் அருள மயிலம் இன்றும் திருமணப் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

திருமண வரம் வேண்டுபவர்கள் மலைமீது ஏறிச்சென்று முருகனை தரிசனம் செய்து பால சித்தர் சந்நிதியிலும் வழிபட்டு வந்தால் விரைவில் மணமாலை தோள் சேரும் என்பது நம்பிக்கை.

பால சித்தர் இந்தத் தலத்திலேயே ஜீவ சமாதி அடைந்தார். சித்தரின் ஜீவசமாதித் தலமாகத் திகழும் இங்கு நேர்மறை அதிர்வுகளை பக்தர்கள் உணர முடியும். சித்தர் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் கிளம்பும் முருகப்பெருமான் பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்வது வழக்கம். எனவே சித்தரின் சந்நிதி வெற்றியை அருளும் சந்நிதி என்கிறார்கள்.

இப்போதும் பாலசித்தர் தொடங்கிவைத்த பொம்மபுர ஆதினத்தின் பரம்பரை குருமகா சன்னிதானமே இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.

இந்தத் திருக்கோயிலுக்கு பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம். இவற்றுள் ஒன்று அக்னி தீர்த்தம். இது மலைக்குத் தென்கிழக்கில் உள்ளது. இதில் நீராடியோ, அல்லது இதன் நீரைத் தலையில் தெளித்துக் கொண்டோ, குளக்கரையில் இருக்கும் சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுவது வழக்கம்.

மயிலம் திருக்கோயில்

இந்தத் தலத்தின் சிறப்புகளில் முக்கியமானது இங்கு மூன்று உற்சவர்கள் இருப்பது. பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடைபெறும்.

இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் அருள் பாலிக்கிறார்.

மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகர். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாள்களும் இவர் வீதியுலா வருவது சிறப்பு.

கடந்த 15-ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. இதில், பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை முன்னின்று நடத்தினார். இன்று காலை 9.15 முதல் 10.45க்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆதீன கா்த்தா்கள், மடாதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

கும்பாபிஷேகம் முடிந்த 48 நாள்கள் மண்டல பூஜை மிகவும் விசேஷமானது. இந்தக் காலத்தில் முருகனை தரிசனம் செய்து வேண்டினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை மயிலம் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவாருங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.