புதுடெல்லி: போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் 5-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர், எம்எஸ்பி கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்துதல்,பயிர் கழிவுகளை எரித்தல், வழக்குகள் போன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் 5-வது சுற்றில் பேச அரசு தயாராக இருக்கிறது. விவசாயத் தலைவர்களுக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதியை பேணுவதற்கு இது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 4-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் டெல்லி நோக்கிச் செல்லும் தங்களின் போராட்டத்தினை இன்று காலையில் மீண்டும் தொடங்கினர். பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் போலீஸாரின் தடைகளை மீறி டெல்லி நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்த ஷம்பு எல்லையில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
முன்னதாக, வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப் – ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் விவசாயிகள் குவிந்துள்ளனர்.இதனை ஒட்டி பஞ்சாப், ஹரியாணா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீஸார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பஞ்சாப் கிஷான் மஸ்தூர் கமிட்டி தலைவர் சர்வான் சிங் பாந்தர் அளித்த பேட்டியில், “அரசாங்கம் எங்களை கொலைகூட செய்யட்டும். ஆனால் எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டாம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்து பிரதமர் இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம் ஒருபோதும் மன்னிக்காது. அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் அமைதியாக டெல்லியை நோக்கி முன்னேற அனுமதியுங்கள். அது எங்களின் உரிமை” என்று தெரிவித்துள்ளார்.