பெங்களூரு : ”முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ‘லவ் மீ வெரி மச்’. எப்போதும் வெளியில் இருக்கும்போது, என்னை லவ் செய்வார். இங்கு அரசியல் ரீதியாக பேசுகிறார்,” என, முதல்வர் சித்தராமையா சட்டசபையில் ஜாலியாக பேசினார்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, முதல்வர் சித்தராமையா பதில் அளித்து கொண்டிருந்தபோது நடந்த விவாதம்:
முதல்வர்: பசவராஜ் பொம்மை சும்மாவே குற்றஞ்சாட்டுவார்.
பா.ஜ., – பசவராஜ் பொம்மை: அரசியலில் என்ன நடக்கும் என்று, எங்களுக்கும் தெரியும்; உங்களுக்கும் தெரியும். நாம் இருவரும் ஒரே இடத்திலும் இருந்தோம். எதிரெதிரேவும் இருந்தும் அரசியல் செய்துள்ளோம். பல விஷயங்களில் எங்கள் மனதிலும், உங்கள் மனதிலும் அப்படியே இருக்கிறது. எதுவும் செய்ய முடியாது. அது, என்றைக்காவது ஒரு நாள் வெடிக்கும்.
முதல்வர்: நீங்கள், இந்த ஒரு விஷயத்தில் தான் உண்மை கூறியுள்ளீர்கள்.
இதற்கு, அவையில் அனைவரும் சிரித்தனர்.
முதல்வர்: இங்கு இது மட்டும் தான் உண்மை சொல்லியுள்ளீர்கள். விதான் சவுதாவின் வெளியில் உண்மை பேசுகிறீர்கள்.
பசவராஜ் பொம்மை: என்ன செய்தாலும், இருவரும் இணைந்து செய்துள்ளோம். நான் கூறிய உண்மையில், உங்களுக்கும் பங்கு உண்டு. நான் பொய் சொல்லி இருந்தால், அதிலும் உங்களுக்கு பங்கு உண்டு.
முதல்வர்: வெளியில் நாம் இருவரும் ஒன்றே. இங்கு மட்டும் வேறு வேறு.
பசவராஜ் பொம்மை: வெளியில் மட்டும் ஏன்? எங்கும் ஒன்று தான்.
முதல்வர்: பசவராஜ் பொம்மை ‘லவ் மீ வெரி மச்’. எப்போதும் வெளியில் இருக்கும்போது, என்னை லவ் செய்வார். இங்கு அரசியல் ரீதியாக பேசுகிறார். அப்படி தான் பேச வேண்டும்.
பசவராஜ் பொம்மை: தனிப்பட்ட சம்பந்தம் வேறு, அரசியல் சம்பந்தம் வேறு.
முதல்வர்: ஆமாம், சரி, சரி. தனிப்பட்ட சம்பந்தம் வேறு; அரசியல் சம்பந்தம் வேறு. உங்கள் பேச்சை ஆமோதிக்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்