செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்றாலும் எம்எல்ஏவாக செல்வாக்குடன்தான் உள்ளார்: அமலாக்கத் துறை தரப்பில் ஆட்சேபம்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்றாலும் எம்எல்ஏ-வாக அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க நபராக உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் தனதுவாதத்தில், “அமலாக்கத் துறையின் வாதங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜியின் வீட்டில் கைப்பற்றியதாகக் கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்துக்கழக அலுவலகத்திலிருந்து பெற்றதாகக் கூறுகின்றனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதாகக் குற்றம் சாட்டும் அமலாக்கத் துறை அதன் காரணமாக ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரி விக்கிறது.

இந்த 30 வழக்குகளில் 21 வழக்குகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு விட்டன. அந்த வழக்குகள் அப்போதைய முதல்வருக்கு எதிராகக் கோஷமிட்டது, கரோனா விதிகளை மீறியது, போஸ்டர் ஒட்டியது, போராட்டங்களில் ஈடுபட்டது போன்றவற்றுக்காக அரசியல் காரணங்களுக்காக பதியப்பட்ட வழக்குகள்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள 3 வழக்குகள் தவிர மற்ற எஞ்சிய அனைத்து வழக்குகளுக்கும் அரசியல் முன்விரோதம் மட்டுமே காரணம்.

அந்த வழக்குகளை ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தனது வாதத்தில் சுட்டிக்காட்டியிருப்பது தவறு. கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரி அதிகாரிகளை சிலர்தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.67 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் புலன் விசாரணை முடிந்துவிட்டதாக அமலாக்கத் துறையே தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்பதால் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், நீண்ட காலமாக சிறையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்கத் தயார்” என வாதிட்டார்.

ரூ.67 கோடி மோசடி: அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் வாதிடுகையில், “அரசு போக்குவரத்துக் கழகத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவி வகித்தபோது 2 ஆயிரத்து 700 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பதற்கு போதுமான விவரங்கள் பென்-டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. ரூ.67 கோடி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட தற்கான அனைத்து ஆதாரங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்களே. செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியில் இல்லை என்றாலும் எம்எல்ஏ-வாக பதவியில் நீடிக்கிறார்.

செல்வாக்கு மிக்க நபர்: இந்த வழக்கில் தனக்கு ஜாமீன்கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த ராஜினாமாவை அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டதிலிருந்தே அதன் உள்நோக்கம் என்ன என்பதுதெளிவாகப் புரியும். அவர் அரசியலில் செல்வாக்கு மிக்க நபர். அவரால் சாட்சிகள் கலைக்கப்பட மாட்டார்கள் என்பதற்கும், மிரட்டப்பட மாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

மற்ற வழக்குகளைப் போல சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளை அணுக முடியாது. அவரது சகோதரர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.