சென்னை: தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதில்5 வயதுக்குட்பட்ட 57.83 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி (ஞாயிறு) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 5 வயதுக்குட்பட்ட சுமார் 57.83 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் சொட்டு மருந்துவழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.