ஐ.பி.எல் தொடருக்கான போட்டி அட்டவணையை இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே அந்த அட்டவணை குறித்து சில தகவல்கள் கசிந்திருக்கிறது.
எப்போதுமே ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியை முந்தைய சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியை கொண்டு தொடங்குவதுதான் வழக்கம். பெரும்பாலான சமயங்களில் இப்படித்தான் நடந்திருக்கிறது. இந்த முறையும் இந்த வழக்கத்தை பின்பற்றியே ஐ.பி.எல் தொடங்கவிருக்கிறது. மார்ச் 22 ஆம் தேதி முதல் வரவிருக்கும் 17 வது சீசன் தொடங்கப்போகிறது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடப்போகிறது. சென்னையை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில்தான் அந்த போட்டி நடைபெறவிருக்கிறது. போட்டிக்கு முன்பாக தொடக்க விழா கலைநிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்கும் மார்ச் 22 ஆம் தேதியன்று மாலையோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
தொடக்கவிழாவில் அத்தனை அணிகளின் கேப்டன்களும் ஒரு சேர பங்கேற்கவிருக்கின்றனர். இவைபோக, எப்போதுமே ஐ.பி.எல் கோப்பையுடன் கேப்டன்களுக்கான போட்டோ ஷூட்டும் நடைபெறும். அதுவுமே இந்த முறை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து முதல்கட்ட தேர்தல் நடைபெறுவதற்கும் இடையில் ஏறக்குறைய ஒரு மாத இடைவெளி இருக்கும். எனில்,
நாடாளுமன்ற தேர்தல் ஏறக்குறைய ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கிவிடும். ஐ.பி.எல் நிர்வாகமுமே தேர்தலை பொறுத்துதான் போட்டி அட்டவணையை வெளியிட இருக்கிறார்கள்.
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டுமே இப்போது அறிவிக்கவிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் எந்தெந்த கட்டங்களில் எந்தெந்த நகரங்களில் தேர்தல் நடக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு பின்னர் மற்ற போட்டிகளுக்கான அட்டவணையை அறிவிக்கும் திட்டத்தை வைத்திருக்கின்றனர்.
இறுதிப்போட்டி மே மூன்றாவது வாரத்தில் நடைபெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தேர்தல் குறுக்கீடுகள் எதுவும் இல்லையெனில் அந்த இறுதிப்போட்டியுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெறும். ஐ.பி.எல் அட்டவணையை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்.