Janakaraj: “ஜனகராஜ் சார் இப்போ வரைக்கு ஹெல்த், பிட்னெஸ்ல சரியாதான் இருக்காரு" – இயக்குநர் நரேஷ்

நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் 80களிலும் 90களிலும் வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ்.

நடிகர் ஜனகராஜ் 10 வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதியின் ’96’ திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படியான காலகட்டத்தில் அவர் அமெரிக்காவில் வசிக்கிறார் என்பது போன்ற வதந்திகளும் பரபப்பட்டன. சமீபத்தில் தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் மூலம் ஜனகராஜ் அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளியும் வைத்திருந்தார். திரைப்படங்கள் நடிப்பதோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் இன்றைய தலைமுறையினருடன் சேர்ந்து தற்போது ‘தாத்தா’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தக் குறும்படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குநர் நரேஷ். இதற்கு முன் இயக்குநர் பாலாஜி தரணிதரன், சுதா கொங்கரா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவரிடன் இந்தக் குறும்படம் குறித்து பல கேள்விகளை முன் வைத்தோம். பேசத் தொடங்கிய நரேஷ், ” முதல்ல ஒரு குறும்படம் பண்ணனும்னு ஐடியா இருந்தது. இது ஒரு எமோஷனல் கதை. தாத்தாவுக்கும் பேரனுக்குமான எமோஷன்தான் இந்தக் குறும்படத்துல பேசப்பட்டிருக்கு. இந்தக் கதையை ஜனகராஜ் சார் பண்ணினால் நல்லா இருக்கும்னு யோசிச்சேன். ஜனகராஜ் சார் ஒரு காமெடி நடிகர் மட்டும் கிடையாது. அவர் ஒரு நல்ல குணச்சித்திர நடிகரும் கூட. அவர் பண்ணியிருக்கிற எமோஷனல் கதாபாத்திரங்களை பார்த்து நான் அழுதிருக்கேன். நான் நினைச்ச மாதிரி ஜனகராஜ் சார் இதுல நடிச்சிருக்காரு. குறும்படமும் நல்லா வந்திருக்கு.

தாத்தா பட போஸ்டர்

நான் முதல்ல ஜனகராஜ் சாருக்கு கால் பண்ணி என்னைப் பத்திச் சொல்லிட்டு இந்தக் குறும்படத்தை பத்தியும் சொன்னேன். அப்போ அவருக்கு குறும்படங்கள் பத்தி பெருசா ஐடியா இல்ல. நான் ‘எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் மட்டும் கொடுங்க. நான் வந்து கதை சொல்றேன்’னு சொன்னேன். அதுக்கு பிறகு நான் போய் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடிச்சு நடிக்கிறேன்னு சொல்லிட்டார். நான் இதுக்கு முன்னாடி உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கேன். முதல் முறையாக ஒரு சீனியர் நடிகரை வைத்துப் படத்தை எடுத்திருக்கேன். அந்த காலத்துல உள்ள நடிகர்களெல்லாம் சினிமா மீது ரொம்பவே ஈடுபாட்டோட இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஜனகராஜ் சாரும் அப்படித்தான். ‘ஷாட் ரெடி’னு சொன்னதும் ஓடி வருவாரு. ‘இவ்வளவு அவசரமில்ல, பொறுமையா வாங்க’னு சொல்லுவேன். ‘எனக்கு அது பழகிடுச்சு குட்டி’னு சொல்லுவாரு.

இப்படிதான் ரொம்பவே ஆர்வத்தோட இருப்பாரு. நான் இயக்குநர் பாலாஜி தரணிதரன் சார் கிட்ட ‘ஒரு பக்க கதை’, ‘சீதக்காதி’ படங்கள்ல உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கேன். இயக்குநர் சுதா கொங்கரா மேம்கூடவும் ‘சூரரைப் போற்று’, ‘பாவக் கதைகள் – தங்கம், சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘ சர்ஃபிரா’ ஆகிய திரைப்படங்கள்ல உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கேன். ‘புதுப்பேட்டை’ படம் பார்த்தப் பிறகுதான் சினிமாவுக்கு வரணும்னு முடிவு பண்ணேன்.

குறும்படத்தின் இயக்குநர் நரேஷ்

படிப்பு முடிஞ்சதுக்குப் பிறகு டிஜிட்டல் மீடியால அசிஸ்டன்ட் கேமராமேனாக முதல்ல வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு மக்கள் தொடர்பாளரோட டீம்ல வேலை பார்த்தேன். இதுக்கப்புறம் தான் உதவி இயக்குநராக வேலை பார்க்கத் தொடங்கினேன்.” எனப் பேசினார். திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தப் பிறகு பலரும் முழு நீளப் படத்தை இயக்க வேண்டும் என்றுதான் ஆசை வைத்திருப்பார்கள். ஆனால், நரேஷ் தனது முதற் புள்ளியை குறும்படத்திலிருந்து தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக கேட்கையில், ” என்னுடைய நண்பர் கவிதா என்பவர்தான் இந்தக் குறும்படத்தோட தயாரிப்பாளர். அவங்க இதுக்கு முன்னாடியே குறும்படங்கள் தயாரிச்சிருக்காங்க. இவங்க ஒரு பத்திரிக்கையாளரும்கூட. இவங்கள எனக்கு முன்னாடியே தெரியும். ஒரு நாள் ‘குறும்படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீ பண்றியா’னு கேட்டாங்க. அப்படிதான் இந்த குறும்படம் ஆரம்பமாச்சு.” என்றவர், “இந்த படத்துல சைக்கிள் ஓட்டுற சீன் ஒன்னு இருக்கு. நமக்கே ரொம்ப நாள் கழிச்சு சைக்கிள் ஓட்டுனா ஒரு மாதிரி இருக்கும்.

ஜனகராஜ்

எனக்கு ஜனகராஜ் சார் மேல அதிகளவுல அக்கறை இருக்கு. இந்தக் காட்சியை அவர்கிட்ட சொன்னதும், ‘நான் சைக்கிள் ஓட்டி ரொம்ப நாள் ஆச்சு. ஆனா, நான் ஓட்டுறேன்’னு சொன்னார். நீளமான ரோட்டுல நாலு ரவுண்டு அவர் சைக்கிள் ஓட்டினார். அவர் இப்போ வரைக்கும் ஹெல்த், ஃபிட்னெஸ்ல விஷயத்துல ரொம்பவே சரியாகதான் இருக்காரு. அதுமட்டுமில்ல, இப்போகூட நடிப்பு மேல ரொம்பவே ஆர்வத்தோட ஈடுபாட்டோட இருக்காரு. இப்படியான விஷயங்கள் எனக்கு அவர் ஒரு சீனியர் நடிகர்ங்கிறதையே ஃபீல் பண்ண வைக்கல. அடுத்த வாரத்துக்குள்ள இந்த ‘தாத்தா’ குறும்படம் வெளியாகிடும். எந்த தளத்துல வெளியாகும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாங்க.” என முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.