திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் நாடாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலித் தொழிலாளியான இவர், மனைவி சந்திரா, மகள் சுதா ஆகியோருடன் வசித்துவருகிறார். சுதா, தற்போது தமிழக அரசின் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், கல்வியின் மூலம் உயர்ந்த பதவியை அடைந்துள்ளார். வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆயுதம் புத்தகம் மட்டுமே எனப் பெருமிதத்துடன் கூறி வரும் சுதாவை திருத்துறைப்பூண்டி மக்கள் ப்ளக்ஸ் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
இப்போது, வாழ்த்து பூங்கொத்துகளால் நிரம்பியிருக்கிறது சுதாவின் வீடு. வறுமைக்கு இடையே கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்த சுதாவின் பெற்றோரின் முகத்தில் பரவசத்தைப் பார்க்க முடிகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பதற்கு என்னுடைய வெற்றி ஒரு உதாரணம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சுதா.

அவரிடம் பேசினோம், “என்னோட அப்பா ஒரு விவசாய கூலித்தொழிலாளி. சாதாரணமான குடும்பம் எங்களுடையது. அன்றாடம் கிடைக்கும் கூலியில் குடும்பத்தையும் கவனித்து எங்களை வளர்த்தார் அப்பா. சின்ன வயதிலிருந்தே படிப்பில் முதலிடம் பெறுவேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு இளங்கலை பட்டப்படிப்பை திரு.வி.க. அரசு கல்லூரியிலும், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்து முடித்தேன். அரசுப் பள்ளிகளிலும் அரசு கல்லூரிகளிலும்தான் படித்தேன்.
பின்னர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இளநிலை வழக்குரைஞராக பணியாற்றி வந்தேன். அத்துடன் நீதிபதி தேர்வுக்காக திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்பில் படித்தேன். இதைத் தொடர்ந்து எழுதிய நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகியிருக்கிறேன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இது போன்ற தேர்வை எழுதி பெரிய பதவியில் அமர முடியுமா என்கிற கேள்வியை உடைத்தெறிய வேண்டும் என்ற வைராக்கியத்தில் படித்தேன்.

நீதித்துறை நடுவர், வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அருள்செல்வன் சார் உள்ளிட்ட பலர் இதற்கு உறுதுணையாக இருந்தனர். முயற்சி பண்ணாத வரை எல்லாம் எட்டாக்கனிதான். புக்கை கையில் எடுத்துத் தலைகுனிந்து படித்தால் அந்தப் படிப்பு நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும். புத்தகம்தான் என்னுடைய தெய்வம். நான் நீதிபதி தேர்வு எழுதினது என் பெற்றோருக்குக்கூடத் தெரியாது. சாதிச்சுட்டு எல்லோருக்கும் சொல்லவேண்டும் என நினைத்தேன். கல்வியை முறையாக கற்றால் உயர்ந்த நிலையை அடையலாம். நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதைப் புத்தகம் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்” என்று சுதா கூறினார்.