RAGGING: `இதைச் செய்வதற்கு, படிக்காமல் இருப்பதே நல்லது..!' – ராகிங் வழக்கில் நீதிபதி வேதனை

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவந்த எட்டு மாணவர்கள், மதுபானம் வாங்கப் பணம் தரவில்லை எனக் கூறி, இளைய மாணவரை மொட்டையடித்துத் தாக்கி, சுமார் 5 மணி நேரம் விடுதி அறையில் பூட்டிவைத்து, ராகிங் செய்ததாக பீளமேடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், ராகிங் தடைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, எட்டு மாணவர்களும் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டுவிட்டதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பாதிக்கப்பட்ட மாணவரும், அவரின் தந்தையும், “இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்க விரும்பவில்லை. குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கோரினர். எங்களுக்கு எந்த நிர்பந்தமும் தரவில்லை” எனத் தெரிவித்தனர்.

ராகிங் கொடுமை

இதையடுத்து, எட்டு மாணவர்கள்மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நோக்கம் என்ன… இதற்கு பதில், படிக்காமல் இருப்பதே நல்லது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்னொருவரை துன்புறுத்துவதன் மூலம் என்ன இன்பம் கிடைக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஏற்பட்ட வலி என்ன என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பள்ளியில் படித்த திருக்குறளைப் பின்பற்றாவிட்டால், அதைப் படித்து என்ன பயன்?

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

தங்களைப் படிக்க வைப்பதற்காக பெற்றோர் படும் சிரமங்களை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ராகிங் மனிதத்தன்மையற்ற செயல். மற்றவரை துன்புறுத்துவதன் மூலம் இன்பமடைபவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர். மாணவர் பருவ வாழ்க்கையை இளைய சமுதாயத்தினர் ரசித்து வாழ வேண்டுமே தவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என அறிவுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.