“சிவில் நீதிபதிகள் பலன்களை எதிர்பார்க்காமல் பணியாற்ற வேண்டும்” – உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் அறிவுரை

மதுரை: “தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவில் நீதிபதிகள் எந்த பலன்களையும் எதிர்பார்க்காமல் பணிபுரிய வேண்டும். தவறு செய்யும் எண்ணம் வரக்கூடாது” என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தினார்.

உயர் நீதிமன்ற கிளை மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் (எம்பிஏ) புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 28 சிவில் நீதிபதிகளுக்கான பாராட்டு விழா எம்பிஏ தலைவர் எம்.கே.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். புதிய சிவில் நீதிபதிகளை பாராட்டி உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: “தமிழகத்தில் ஒரே நேரத்தில் 245 சிவில் நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சட்டங்களை தெரிந்து கொள்வது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் கடமை.

மற்றவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பவர்களில் முதலில் இருப்பது கடவுள், அடுத்து நீதிபதிகள். நீதிபரிபாலனம் நடைபெறும் போது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். மனம் சுத்தமாக இருந்தால் தான் நீதிதேவனின் அரசாட்சி நடைபெறும்.பல கனவுகளுடன் நீதித்துறையில் கால்பதிக்கிறீர்கள். நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அப்போது பல்வேறு இடையூறுகள் வரும்.

அவற்றை புறம்தள்ளிவிட்டு தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி பணிபுரிபவர்கள் தான் உண்மையான நீதிபதிகள். எந்த பலனையும் எதிர்பார்க்காமல் பணிபுரிய வேண்டும். தவறு செய்யும் எண்ணம் வரக்கூடாது. உங்கள் கைகளில் தான் நீதித்துறையின் மான்பு அடங்கியுள்ளது. சிவில் நீதிமன்றம் முதல் நீதிமன்றம் என்பதால் சிவில் நீதிபதிகள் மீது மக்கள் அதிக எதிர்ப்பார்ப்பு கொண்டிருப்பார்கள். மக்கள் நம்பிக்கை இழக்காமல் பணிபுரிய வேண்டும்” என்று அவர் பேசினார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பேசுகையில், “நீதிபதிகள் கடமை உணர்வுடன் பணிபுரிய வேண்டும். பாகுபாடு பார்க்காமல் பணிபுரிய வேண்டும்” என்றார். உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார், எம்பிஏ துணைத் தலைவர் எஸ்.மகேஷ்பாபு உள்பட பலர் பேசினர். நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். எம்பிஏ பொருளாளர் எஸ்.சுரேஷ்குமார் ஐசக்பால் நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.