ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது படிப்படியாக பூதாகரமாக வெடித்தது.
இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவரும் ஜெகன் அரசு குறித்து பகிரங்கரமாக பேசி வந்தார். ஒரு கட்டத்தில் ஹைதராபாத்தில் வசிக்கும் இவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஜாமீனில் வெளியே வந்ததும் ஜெகன் அரசு மீது உச்சநீதிமன்றம் வரை புகார் மனுக்களை தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று தனது எம்.பி. பதவியையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக ரகுராம கிருஷ்ணம்ம ராஜு கூறி, அதற்கான கடிதத்தை கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பி வைத்தார். உடனடியாக தனது ராஜினாமாவை ஏற்க வேண்டுமெனவும் அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.