தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.52,250 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

துவாரகா / ராஜ்கோட்: குஜராத்தின் துவாரகாவில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி ரூ.4,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

ஓகா மற்றும் பேட் துவாரகா பகுதியை இணைக்கும் சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் ஆகும். ராஜ்கோட் – ஓகா, ராஜ்கோட் – ஜெதல்சார் – சோம்நாத் மற்றும் ஜெதல்சார் – வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடலில் மூழ்கிய துவாரகா நகரை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். எனது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி உள்ளது. ஆழ்கடலில் மூழ்கி புண்ணிய துவாரகா நகரை பார்த்தபோது பரவச நிலையை அடைந்தேன். திருமாலின் அருளால் சுதர்சன் சேது பாலத்தை திறந்து வைத்துள்ளேன். இதன்மூலம் நாடு முழுவதும் இருந்து துவாரகாதீஷ் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த பலன் அடைவார்கள்.

நமது நாட்டை நீண்ட காலம்ஆட்சி செய்தவர்கள் (காங்கிரஸ்) மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. முந்தைய ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல் ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கி ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன.

கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு ஊழல் அறவே ஒழிக்கப்பட்டது. நாட்டின் மிக நீளமான கேபிள் பாலத்தை (சுதர்சன் சேது) இன்று திறந்துள்ளோம். அண்மையில் நாட்டின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் திறந்தோம்.

காஷ்மீரின் செனாப் பகுதியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வலுவான பாரதம் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பின்னர் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற நலத் திட்டவிழாவில் ரூ.48,100 கோடிமதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.குஜராத், பஞ்சாப், உ.பி, மேற்குவங்கம், ஆந்திரா ஆகியமாநிலங்களில் 5 நகரங்களில்அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்து வைத்தார். 23 மாநிலங்களில் ரூ.11,500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சுகாதார திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

தமிழக தலைநகர் சென்னைகிண்டியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை, புதுச்சேரியின் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஏனாமில் உள்ள ஜிப்மரின் 90 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு ஆலோசனை பிரிவையும் அவர் தொடங்கி வைத்தார். திருவள்ளூரில் புதியகூட்டு காசநோய் ஆராய்ச்சி மையத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் ரூ.2280 கோடி மதிப்பிலான 21 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்படி தமிழ்நாட்டின் திருப்பூர், ஆந்திராவின் காக்கிநாடா உட்பட 8 நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ள 8 மருத்துவமனைகளையும் அவர் மக்கள் சேவைக்கு அர்ப்பணித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.