தென்காசி: தண்டவாளத்தில் விபத்து; தைரியமாக டார்ச்லைட் அடித்து ரயிலை நிறுத்திய வயதான தம்பதியர்!

தமிழ்நாடு – கேரளா எல்லையில் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. அந்தச் சமயம் அந்த வழியாக கேரளா நோக்கி வந்த ரயிலை வயது ஒரு முதிர்ந்த தம்பதியினர் டார்ச் லைட் மூலம் சிக்னல் காண்பித்து நடுவழியில் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தப் பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கேரளாவில் இருந்து பிளைவுட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று புளியரை, செங்கோட்டை வழியாகத் தமிழகத்தின் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் லாரி, கேரளா எல்லையில் உள்ள எஸ்-வளைவுப் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் நிலைதடுமாறி அருகே இருந்த தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சத்தம் கேட்டு, அருகே வசித்த வந்த வயதான தம்பதியரான சண்முகையா – குருந்தம்மாள் இருவரும் சம்பவ இடத்திற்கு ஓடிவந்துள்ளனர். அதேசமயம் அவ்வழியே கேரளா நோக்கி செல்வதற்காக ரயில் ஒன்றும் வந்துள்ளது.

சண்முகையா – குருந்தம்மாள்

பெரும் விபத்து நடக்கவிருப்பதை அறிந்த சண்முகையா – குருந்தம்மாள் தம்பதியினர் கையில் டார்ச்லைட் எடுத்துக்கொண்டு லாரி விழுந்து கிடந்த இடத்திலிருந்து ரயில்வே தண்டவாளத்தின் வழியாகவே ரயில் வரும் பாதையை நோக்கி சிறிது தூரம் ஓடிச்சென்றுள்ளனர். கண்ணுக்கு எட்டிய தொலைவில் ரயில் வருவதைப் பார்த்த தம்பதியினர், தாங்கள் கையில் எடுத்துவந்த டார்ச் லைட்டை ஒளிரச்செய்து ரயிலை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர். இதைப் புரிந்துகொண்டு ரயில் ஓட்டுநரும் ரயிலை நடுவழியிலேயே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி முழுவதும் சேதமடைந்த நிலையில், லாரி டிரைவரான முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், கிளீனர் விபத்து நடந்த சமயத்தில் கீழே குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, விபத்து குறித்து உடனடியாக புளியரை சோதனைச்சாவடிக்கும், புளியரை போலீஸூக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த புளியரை போலீஸார் மற்றும் தென்காசி ரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர்கள் கருப்பவிநாயகம், மாரிமுத்து, ரவிக்குமார் ஆகியோர் விபத்தில் உயிரிழந்த மணிகண்டனின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” எனக் கூறினர்.

ரயில் பாதையில் லாரி விபத்து

விபத்து குறித்து ரயில்வேதுறை அதிகாரிகளிடம் பேசியதற்கு, “திருவனந்தபுரம் – புனலூர் – எடமன் இடையே சிறப்புப் பயணிகள் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரெயில் பெட்டிகள் எடுத்துச்செல்லும் பொருட்டு திருநெல்வேலியிலிருந்து கேரளா நோக்கி ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் நள்ளிரவில் செங்கோட்டை பகவதியாபுரம் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் போதுதான் லாரி விபத்து காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த சென்னை – கொல்லம் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து சுமார் 5 மணிநேரம் தாமதமாக சென்னை – கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், சாலையில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கும் வாகனங்கள் தடுப்புகளைத் தாண்டி ரயில்வே தண்டவாளத்துக்குள் வராத வகையில் கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றனர்.

ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ரயில் வரும் பாதையை நோக்கி ஓடிச் சென்று டார்ச் லைட் மூலமாக சமிக்ஞை காட்டி அவ்வழியாக வந்த ரயிலை நிறுத்திய சண்முகையா – குருந்தம்மாள் தம்பதியினரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அந்தத் தம்பதியினருக்கு போஸ்ட்கள் குவிந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.