கோவை: கோவையில் இன்று (பிப் 26) பாஜகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் அது ஒதுக்கி வைக்கப்பட்டது.
பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் இன்று (பிப் 26) நடைபெற இருப்பதாகவும் பாஜகவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு இன்று மாலை செய்தியாளர்கள் சென்றிருந்தனர். மாலை 6.40 மணி வரை பாஜகவினர் யாரும் அங்கு வரவில்லை. அதன் பின்னர், கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவில்லை.
முதலில் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசும்போது, “கோவையில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர், இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாற்றுக் கட்சியினர் இணையும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவுக்கு வர தயாராக உள்ளனர்” என்றார்.