மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்குதலுக்கான கடைசி தேதி மார்ச் 28, தேர்தல் முடிவுகள் மே 22-ம் தேதி வெளியிடப்படும் என்ற தகவலுடன் தேர்தல் ஆணையம் வெளியிடுவது போன்ற போலி அறிக்கை வாட்ஸ் அப் -குழுக்களில் நேற்று முன்தினம் வைரலாக பரப்பப்பட்டது.
இதைப் பார்த்த பலருக்கு, மக்களவைத் தேர்தல் எப்படி நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் என ஆச்சர்யம் எழுந்தது. அதன்பின்புதான் இது பொய்த்தகவல் என தெரியவந்தது.
இது குறித்து தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில், வாட்ஸ் அப்-ல் பரப்பப்பட்ட தகவல் போலியானது. தேர்தலுக்கான எந்த தேதியும் இது வரை அறிவிக்கவில்லை. அது, பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் கடந்த மாதம் அனுப்பிய துறை சார்ந்த சுற்றறிக்கை ஒன்றில் மக்களவை தேர்தல் உத்தேச தேதி ஏப்ரல் 16 என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளை திட்டமிடுவதற்காக உத்தேச தேதி குறிப்பிடப்பட்டிருந்தது என விளக்கம் அளித்தனர்.