ஹீரோக்கள் என்னை மனிதனாக கூட மதிக்கவில்லை : கண்கலங்கிய அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர் மீரா மஹதி இயக்கி உள்ள படம் டபுள் டக்கர். தமிழ் சினிமாவில் முதன் முறையாக அனிமேஷன் கேரக்டர்கள் படம் முழுக்க நடித்துள்ள படம். இந்த படத்தை ஏர்பிளிக்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தீரஜ், ஸ்மிரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மீரா மஹதி பேசியதாவது: 12 வருட உழைப்புக்குப் பின்னர் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. இது வரை பத்து பனிரெண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். முகநூல் வட்டத்தில் இருக்கும் என் நண்பர்கள் குறும்படத்தைப் பார்த்துவிட்டு நீ சினிமாவே இயக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார்கள்.

நான் கதை சொல்வதற்காக அஜித், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களிடம் செல்லவில்லை. அவர்களை நெருங்கக்கூட முடியாது என்று தெரியும். மூன்று அல்லது நான்கு கோடி பட்ஜெட்டிற்குள் வளர்ந்து வரும் நாயகர்கள் சிலரிடம் தான் கதை சொல்ல முயன்று வந்தேன். ஆனால் அவர்கள் யாரும் ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் தான். அதை எனக்கு யாருமே கொடுக்கவில்லை.

மைம் கோபி மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அவர்தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார்.

ஆரம்பிக்கும் போது இப்படம் சிறிய படமாகத் தான் இருந்தது. படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை நான் ஏற்கனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், நாம் இதை கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். பின்னர் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்தப் பின்னர் படத்தின் பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகமானது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.