நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதமே பாக்கி இருக்கிறது. நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பை மாநகராட்சியில் தற்போது மக்கள் பிரதிநிதிகள் யாரும் கிடையாது. இதனால் அதிகாரிகள்தான் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால், தேர்தல் நடத்தாமல் மாநில அரசு இழுத்தடித்து வருகிறது. தற்போது மார்ச் மாதத்தோடு இந்த நிதியாண்டு முடிய இருக்கிறது.
இதையடுத்து நடப்பு நிதியாண்டுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ய மும்பை மாநகராட்சி அவசர அவசரமாக டெண்டர் விட்டு வருகிறது. டெண்டர் விட்டுவிட்டால் நிதியாண்டு முடிந்தபிறகுகூட செலவு செய்து கொள்ளலாம் என்று கருதி கடந்த 10 நாட்களில் மட்டும் 900 டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு டெண்டரும் ரூ.15 – ரூ.18 லட்சம் மதிப்புடையது ஆகும்.
அதுவும் காந்திவலி மற்றும் மலாடு பகுதி வார்டுகளுக்கு மட்டும் 292 டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் குடிசைப்பகுதியில் உள்ள தெருக்கள் சீரமைப்பு, கழிவறைகள் பழுதுபார்ப்பு, நடைபாதைகளை சரி செய்தல், பூங்காக்கள் பழுதுபார்ப்பு, உடற்பயிற்சி கூடங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவது போன்ற சிறிய சிறிய பணிகளுக்கு இந்த டெண்டர்கள் விடப்பட்டு வருகிறது.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,” நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ய வார்டு மட்டத்தில் டெண்டர் விடப்பட்டு வருகிறது. டெண்டர் விட்ட பிறகு பணிகள் தொடங்காவிட்டால் நிதியாண்டு முடிந்தாலும் அடுத்த நிதியாண்டில் நிர்வாகத்தின் ஒப்புதலை பெற்று பணிகளைத் தொடங்க முடியும்.
இறுதி மாதம் என்பதால், டெண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தேர்தல் வருவதாலும் டெண்டர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்பு தங்களது வார்டுகளில் பணிகளை தொடங்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
வழக்கமாகவே, மார்ச் மாதத்தில் டெண்டர் அதிகமாக இருக்கும். இப்போது தேர்தலும் சேர்ந்து வருவதால் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கிறது” என்றார்.
காந்திவலி பகுதிக்கு மட்டும் 150-க்கும் அதிகமான டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்தல் வர இருப்பதால் மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் மற்றும் கூடுதல் கமிஷனர் வேல்ராசு ஆகியோரை இடமாற்றம் செய்யும்படி, தேர்தல் கமிஷன் மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை மாநகராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.