EPFO: இ.பி.எஃப்.ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம், உலகிலேயே மிகப் பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று.
இந்தியர்களின் வாழ்நாள் சேமிப்பு இ.பி.எஃப்.ஓ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிறுவனத்திடம் சுமார் 27.7 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் இருக்கின்றன. மேலும், 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான நிதி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்த நிலையில், பயனாளிகள் பணத்தை எடுப்பதற்கான செட்டில்மென்ட் கோரிக்கைகளை இ.பி.எஃப்.ஓ இணையதளம் அதிக அளவில் நிராகரிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. அதாவது, செட்டில்மென்ட் பெறுவதற்கான கோரிக்கைகளில், மூன்றில் ஒரு கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பலரும் சமூக வலைதளங்களில் குறை தெரிவித்து வருகிறார்கள்.
இதில் ஒருவருக்கு `எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இ.பி.எஃப்.ஓ அளித்த பதிலில், “பி.எஃப் பணத்தை எடுப்பதற்கோ, செட்டில்மென்ட் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கோ வழக்கமாக 20 நாள்கள் தேவைப்படும்” என்று தெரிவித்துள்ளது.
எனினும், பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான செட்டில்மென்ட் கோரிக்கைகளில் கிட்டத்தட்ட 34 சதவிகித கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக அதிகாரபூர்வத் தகவல் வாயிலாகவே தெரியவருகிறது.
2022-23 நிதியாண்டில் பி.எஃப் பணத்தை எடுப்பதற்கு சுமார் 73.87 லட்சம் கோரிக்கைகள் வந்திருக்கின்றன. இவற்றில் 24.93 லட்சம் கோரிக்கைகள், அதாவது 33.8 சதவிகித கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இது கொரோனா காலத்துக்கு முந்தைய நிராகரிப்பு விகிதத்தைவிட மிக அதிகம். உதாரணமாக, 2017-18-ம் ஆண்டில் 13 சதவிகித கோரிக்கைகளும், 2018-19 ஆண்டில் 18.2 சதவிகித கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்பின், 2019-20 ஆண்டில் 24.1 சதவிகித கோரிக்கைகளும், 2020-21 ஆண்டில் 30.8 சதவிகித கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, 2021-22-ம் ஆண்டில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் எண்ணிக்கை 35.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2022-23 நிதியாண்டில் 33.8 சதவிகித கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பி.எஃப் பணத்தை எடுப்பதில் இவ்வளவு சிரமங்களா என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. முன்பெல்லாம், பணம் எடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட பயனாளி வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பில் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். பின்னர் இ.பி.எஃப்.ஓ நிறுவனத்துக்கு கோரிக்கை வரும்.
ஆனால், இந்த முறை மாற்றப்பட்டு, முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே பி.எஃப் கோரிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது 99 சதவிகித கோரிக்கைகள் ஆன்லைனிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்படி முழுவதுமாக ஆன்லைனுக்கு மாறியதுதான் பி.எஃப் கோரிக்கைகள் நிராரிக்கப்படுவதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த பிரச்னை பற்றி ஏற்கெனவே இ.பி.எஃப்.ஓ மத்திய அறங்காவலர் குழு கூட்டங்களில் பல முறை பேசப்பட்டிருக்கிறதாம்.
பி.எஃப் என்பது பல கோடிக்கணக்கானவர்களின் வாழ்நாள் சேமிப்பை கையாளும் நிறுவனமாக இருக்கிறது. எனவே, பயனாளிகள் எளிதில் பணத்தைப் பெறும் வகையில், இணையதளத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை இ.பி.எஃப்.ஓ நிறுவனம் எடுத்துவந்தாலும், இன்னும் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்!