பிரதமர் மோடி செப்டம்பர் 2014-ல், மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் ஜெர்மன் பாடகியான கசாண்ட்ராவின் பாடலையும், இந்திய இசைமீது கொண்டிருந்த ஆர்வத்தையும் பாராட்டினார். அப்போது, “என்ன இனிமையான குரல். ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளின் மூலம், அவர் கடவுள் மீது வைத்துள்ள அன்பை நாம் உணர முடியும். இந்த இனிமையான குரல் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மகளுக்குச் சொந்தமானது என்பதைக் கூறினால், நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்! இந்த மகளின் பெயர் – கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன்” எனப் புகழ்ந்திருந்தார்.
21 வயதான பாடகி கசாண்ட்ரா இந்தி, மலையாளம், பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடுவதில் பெயர் பெற்றுவிளங்குகிறார். இந்த நிலையில், இன்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் மோடி, பல்லடத்தில் ஜெர்மன் பாடகியான கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் மற்றும் அவரது தாயாரைச் சந்தித்தார்.
அப்போது அந்தப் பாடகி, கிருஷ்ணர் குறித்த ஓர் இந்தி பாடலையும், தமிழில் எஸ்.பி.பி பாடி புகழ்பெற்ற `அண்ணாமலையானே… எங்கள் அன்பில் கலந்தோனே!’ எனத் தொடங்கும் பாடலையும் பாடி அசத்தினார். அந்தப் பாடகி இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்போது பிரதமர் மோடி, மேசையில் தாளமிட்டு, கைகளைத் தட்டி உருகி ரசித்தார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது!