மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தமாகா கூட்டணி அமைத்தது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமாகா நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 2016-ல் தமாகாவுக்கு ஜெயலலிதா 12 தொகுதிகளை வழங்குவதாக தெரிவித்தார்.
ஆனால் அதை ஏற்காமல், நிர்வாகிகளின் கருத்துகளுக்கு மாறாக முடிவெடுத்து, ஓடாத குதிரைகள் மீது பணம் கட்டுவதுபோல, தோற்கும் கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்தார். வரும் மக்களவை தேர்தலில் கட்சியின் எதிர்காலத்துக்கு அதிமுகவுடன்தான் கூட்டணி வைத்திருக்க வேண்டும். ஆனால் வாசனின் முடிவு கட்சியை அழிவுப்பாதைக்கே கொண்டு செல்லும் என்றனர்.
இதற்கிடையில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து யுவராஜாவிடம் கேட்டபோது, ‘‘கடந்த தேர்தல்களில் அதிமுகவின் பல்வேறு நிலை நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வந்தோம்.
இதுவரை வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்காக பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கவே அவரை சந்தித்தேன். நான் 100 சதவீதம் தலைவர் வாசனின் கூட்டணி முடிவுக்கு கட்டுப்பட்டு பணியாற்ற இருக்கிறேன் என்றார். யுவராஜாவுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, கூட்டணி முடிவில் யுவ ராஜாவுக்கு உடன்பாடு இல்லை.
இதுநாள் வரை தங்களுடன் இணக்கமாக இருந்த தமாகா, எவ்வித மாற்று கருத்தும் இல்லாத நிலையில், தங்களை உதறிவிட்டு திடீரென பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை, அவரை சந்தித்து திரும்பிய யுவராஜாவின் பேச்சுகள், செயல்பாடுகள் மூலம் உணர முடிகிறது என்றனர்.
நிர்வாகி ராஜினாமா: இந்நிலையில், தமாகா தலைமை நிலைய செயலாளராக இருந்த டி.என்.அசோகன், தனது பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக ஜி.கே.வாசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.