ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மல்லுக்கட்ட இருக்கின்றன. எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தப்போகும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் அவருக்கு கடந்த ஆண்டே முழங்கால் வலியால் அவதிப்பட்டார். ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டத்தை வென்றதும் நேரடியாக மும்பைக்கு சென்று முழங்கால் வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டபோதும் முழங்கால் வலிக்கு ஆயுர்வேத சிகிச்சையும் ராஞ்சியில் எடுத்துக் கொண்டார். சுமார் ஆறேழு மாதங்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முழங்கால் வலியில் இருந்து மீண்ட அவர் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) ஜெர்சியுடன் பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் தோனி, இம்முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அவர் இந்த ஆண்டு ஓய்வு பெற்றால் வெற்றிகரமான கேப்டனாகவும், சாம்பியன் வீரராகவுமே சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் அந்த விஷயத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு கொஞ்சம் மாறுபாடு இருக்கிறது. ஏனென்றால் அவருடைய ஆசை எல்லாம் என்னவென்றால் இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். விராட் கோலி விளையாடும் அந்த அணி ஐபிஎல் தொடங்கியது முதல் இன்னும் ஒரு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கூட வெல்லவில்லை. அந்த அணிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் நுழைந்த அணிகள் கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிவிட்டன என்பதால் விராட் கோலி இம்முறை ஐபிஎல் சாம்பியனாக பார்க்க வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக ரெய்னா கூறியிருக்கிறார்.
சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்ததுடன், தோனிக்கு அடுத்த இடத்தில் இருந்தார். அதாவது சின்ன தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்ததை ரசிகர்களால் இன்று வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது அவர் வெளிநாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார். எதிர்வரும் ஐபிஎல் 2024 தொடரில் கமெண்டிரி செய்யவும் உள்ளார். ரெய்னாவின் விருப்பப்படி இந்த முறையாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என ரசிகர்களும் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறார்கள்.