கன்னியாகுமரி: தலைமை கொடுத்த `கிரீன்’ சிக்னல்?! – தேர்தல் அலுவலகம் திறந்த பொன்னார்

தமிழ்நாட்டில் பா.ஜ.க வலுவாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு பலரும் முயன்று வருகின்றனர். தொடர்ச்சியாக 9 முறை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனே பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வருகிறார். 1991-ல் முதல்முறையாக போட்டியிட்ட அவர், கடைசியாக 2021-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் வரை அவரே களமிறங்கினார். இதில் 1999-ம் ஆண்டிலும் 2014-ம் ஆண்டிலும் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்றார். 1991,96,98 தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவினார். பின்னர் 1999-ல் வெற்றிபெற்ற அவர் 2004, 2009 தேர்தல்களில் மீண்டும் தோல்வி. 2014-ல் வெற்றி, 2019-லும், 2021 இடைத்தேர்தலிலும் தோல்வி அடைந்தார் பொன்னார்.

விஜயதரணி, தமிழிசை செளந்தரராஜன்

பொன்னாரின் வயது 72-ஐ நெருங்கிவிட்டதால் அவருக்கு கவர்னர் பதவி கொடுக்க உள்ளதாகவும், தொகுதிக்கு புதுமுகம் தேவை என்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரில் மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த புதுமுக வேட்பாளர் நான் தான் என்று மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டுவது, பிளக்ஸ் பேனர் வைப்பது, முகநூலில் பதிவிடுவது என தீவிரம் காட்டிவருகிறார் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரான ஐயப்பன். முன்னாள் ராணுவ வீரர் என்பதால், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை தனது பெயரை தலைமைக்கு பரிந்துரைப்பார் என நம்பிக் கொண்டிருக்கிறார் ஜவான் ஐயப்பன்.

அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவரான தர்மராஜுக்கும் சீட் கொடுக்கலாம் என மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசித்ததாகவும் தகவல் ஓடியது. ஆனால், டெல்லி அரசியல் தர்மராஜுக்கு ஒத்துப்போகாது என்ற எதிர்கருத்தும் எழுந்தது.

இந்த நிலையில்தான் பா.ஜ.க இளைஞரணி தேசிய ஒருங்கிணைப்பாளரான நாகர்கோவிலைச் சேர்ந்த காயத்திரி பிரியதர்ஷினி-யும் சீட் கேட்டு களம் இறங்கியுள்ளார். அகில இந்திய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா மூலம் அவர் காய் நகர்த்தி வருகிறார். காயத்திரி பிரியதர்ஷினியின் தந்தையான ஸ்ரீனிவாச கண்ணன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோட்ட நிர்வாகியாக உள்ளதால் அவரின் பெயரும் பலமாக அடிபட்டு வருகிறது. இதற்கிடையே, குமரியை பூர்வீகமாகக்கொண்ட தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி ஆகியோரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற சீட் கேட்டு தலைவர்களிடம் சிபாரிசு வைத்து வருகின்றனர்.

பா.ஜ.க கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அலுவலகம்

இந்த நிலையில் சத்தம் இல்லாமல் நாகர்கோவிலில் நாடாளுமன்ற பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அந்த திறப்புவிழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோட்ட முக்கிய நிர்வாகி ஒருவரும், எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொன்னாருக்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையும் பொன்னாருக்கு சீட் கொடுக்க தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் நம்மிடம் கூறுகையில், “கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாலை அணிவிக்கப்பட்டது

நாடாளுமன்ற தலைமை தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறப்பதாக இருந்தது. அவர் நடைபயண நிறைவு நிகழ்ச்சி பிசியாக இருப்பதால் பொன்னாரிடமே திறக்கச் சொல்லிவிட்டார். தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால் பொன்னாருக்கே மீண்டும் சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது” என்றனர். அதே சமயம், பா.ஜ.க-வில் கட்சி அறிவித்த பிறகுதான் எதையுமே உறுதியாக நம்ப முடியும். அண்ணாமலை வரமுடியவில்லை என்பதால் மூத்த நிர்வாகியான பொன்னாரை வைத்து அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சில நிர்வாகிகள். இதனிடையே தேசிய அளவிலான பாஜக வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவிலே வெளியாகும் எனவும் அதில் தமிழ்நாட்டில் குமரி, நெல்லை உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.