சீன பொருட்கள் சந்தைகளில் குவிவதால் சிறுதொழில், கைவினைஞர்கள் பாதிப்பு: யாத்திரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அலிகார்: ராகுலின் இந்திய ஒற்றுமை நியாயயாத்திரை உ.பி.யின் மொரதாபாத்தில் இருந்து சம்பல் வழியாக : நேற்று அலிகார் வந்தடைந்தது. ராகுல் காந்தியை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

அலிகாரின் பூட்டுத் தொழில், கைவினைஞர்களின் தயாரிப்புகள் உலகளவில் புகழ்பெற்றவை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மலிவான பொருட்கள் இந்திய சந்தைகளை நிறைப்பதால் உள்ளூர் சிறுதொழில், குடிசைத் தொழில்கள் அழியும் தருவாயில் உள்ளன. அதேநேரம், பெரிய வணிக நிறுவனங்கள் வளமான லாபத்தை அறுவடை செய்கின்றன.

அடுத்த முறை இந்த நகரத்துக்கு வரும்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பார்க்காமல் மேட் இன் அலிகார் எலக்ட்ரானிக் பொருட்களை சந்தைமுழுவதும் பார்க்க விரும்புகிறேன். இந்தியாவில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும்பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதற்காகவே நியாயம் கேட்டு இரண்டாவதாக யாத்திரையை தொடங்கியுள்ளேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுலுடன் யாத்திரையில் பங்கேற்ற பிரியங்கா காந்தி கூறுகையில், “இந்த அநீதி காலத்தில் வேலையின்மை மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. தேர்வுகளில் வினாத்தாள் கசிவால் ஏராளமான வேலைதேடும் இளைஞர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏழைகள், தலித்துகள்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆட்சேர்ப்பில் நடைபெறும் ஊழல்களால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால், அவர்களுக்கு எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை இல்லை” என்றார்.

அலிகார் கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் நியாய யாத்திரை புறநகர் வழியாக ஆக்ராவை நோக்கி நகர்ந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.