பெங்களூரு: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், இந்த நால்வருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார். இந்த நால்வரின் பின்னணி குறித்து பார்ப்போம்.
பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்: கேரள மாநிலம் திருவாழியாட்டில் பிறந்தவர்தான் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர். இந்த திருவாழியாடு தமிழக எல்லையான பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலக்காட்டில் கல்லூரி படிப்பை முடித்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், தேசிய பாதுகாப்பு அகாடமி எனப்படும் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரும்கூட.
1998-ல் இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பணியை தொடங்கிய பிரசாந்த் பாலகிருஷ்ணன், விமான பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார். 3,000+ மணி நேரங்கள் பறக்கும் அனுபவம் கொண்ட பிரசாந்த், இந்திய விமானப்படையின் Su-30 MKI, MiG-21, MiG-29, Hawk, Dornier, An-32, போன்ற பல்வேறு விமானங்களை இயக்கியும் உள்ளார். விமானப் படையின் மூத்த அதிகாரிகள் ஒருவராக அறியப்படும் பிரசாந்த்துக்கு தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர், ஊட்டி வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கல்லூரி மற்றும் தாம்பரம் விமானப் படை தளங்களில் சில காலம் பணிபுரிந்து இருக்கிறார்.
அஜித் கிருஷ்ணன்: தமிழர்கள் பெருமைப்படும் வகையில் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் அமையப் போகிறது என்பதற்கு சான்றுதான் அஜித் கிருஷ்ணன். ஆம், இவர் சென்னையில் பிறந்தவர். 1982-ல் சென்னையில் பிறந்துள்ளார். இவரும் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவர். இங்கு பயின்றபோது குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் அஜித் கிருஷ்ணன்.
2003-ல் இந்திய விமானப்படையின் போர் விமானியாக வாழ்க்கையை தொடங்கிய அஜித் கிருஷ்ணன், 2,900 மணி நேரங்கள் பறக்கும் அனுபவம் கொண்டுள்ளார். இந்திய விமானப்படையின் Su-30 MKI, MiG-21, MiG-21, Mig-29, Jaguar, Dornier, An-32 போன்ற பல்வேறு வகை விமானங்களை இயக்கியுள்ள அஜித்தும் , ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் பயின்றுள்ளார்.
அங்கத் பிரதாப்: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 1982-ம் ஆண்டு ஜூலை 17 ம் தேதி பிறந்த அங்கத் பிரதாப், நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவர். 2004ல் இந்திய விமானப்படையில் இணைந்து போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கி இதுவரை 2,000 மணி நேரங்கள் பறக்கும் அனுபவம் கொண்டுள்ளார். இவர், இந்திய விமானப்படையின் Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier, An-32 ஆகிய விமானங்களை இயக்கியுள்ளார்.
சுபான்ஷு சுக்லா: 1985-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் பிறந்த சுபான்ஷு சுக்லாவும் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவர். 2006ல் இந்திய விமானப்படையில் இணைந்துள்ளார். மற்ற மூவர்களை போலவே 2,000 மணிநேரங்கள் பறக்கும் அனுபவத்துடன் இந்திய விமானப்படையின் Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier, An-32 ஆகிய விமானங்களை இயக்கியுள்ளார் சுபான்ஷு சுக்லா.
தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? – ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த சவால் மிகுந்த பணிக்கு இந்திய விமான படை விமானிகளே சரியாக இருப்பார்கள் என்று இஸ்ரோ முடிவு செயத பின்னணி, விமானங்கள் குறித்த அறிவை அவர்கள் எளிதாக பெற்றிருப்பதால் மிஷன் செயல்படுத்தும்போது ஏதேனும் தவறுகள் நடந்தால் அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியும் என்பதற்காகவே. விண்வெளிக்குச் செல்லும் இந்தக் குழுவில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த தேர்வு நடந்தது. பல விமானிகள் இந்த பணிக்கு விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், அவர்கள் 12 பேரை தேர்வு செய்தது இந்திய விமானப்படையின் கீழ் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின்.
இந்த 12 பேருக்கும் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி மருத்துவ கழகத்தில் (IAM) பல்வேறு தொடர் தேர்வுகள், சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் இறுதியில் ஐஏஎம் மற்றும் இஸ்ரோ இணைந்து இந்த நான்கு பேரைத் தேர்வு செய்தது. 2019ல் தொடங்கி 2020ல் வீரர்களை தேர்வு செய்யும் பணி முடிந்தாலும், இஸ்ரோ இதுவரை இந்த நால்வரின் விவரங்களை வெளியிடவில்லை.
ஆனால், அதேநேரம், ககன்யான் திட்டத்துக்கான பயிற்சியை தேர்வு செய்யப்பட்ட நான்கு வீரர்களும் 2020-லேயே தொடங்கிவிட்டனர் என்கிறது இஸ்ரோ தரப்பு தகவல். ரஷ்யாவில் முதல்கட்ட பயிற்சி. அதன்பின் இந்தியாவில் இரண்டாம் கட்ட பயிற்சி. பின்னர், பெங்களூரில் இதற்கென பிரத்யேகமாக நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி வகுப்பறையில் கடந்த ஆறு மாதங்களாக இந்த நால்வருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுவந்தன.
ககன்யான் ஃப்ளைட் சிஸ்டம்ஸ், மைக்ரோ-கிராவிட்டி, ஏரோ-மருத்துவப் பயிற்சி, மீட்பு மற்றும் உயிர்வாழும் பயிற்சி, விமான நடைமுறைகளில் மாஸ்டரிங் மற்றும் குழுப் பயிற்சி சிமுலேட்டர்கள் உள்ளிட்ட பல பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.