கோவை: “எங்கள் மடியில் கனமில்லை. நாங்கள் எதற்கும் பயப்படத் தேவை இல்லை. பாஜகவினர் பிள்ளை பிடிப்பவர்களைப் போல அலைகின்றனர். பிள்ளை எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் நிலைமை. நான் இப்போது ஒன்றை கூறுகிறேன். பாஜகவில் இருந்த எம்எல்ஏக்கள் இருவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளனர்” என்று அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் கூறியுள்ளார்.
கோவையில் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜகவில் இணையப்போவதாக வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவிநாசி சாலை அனைவருக்கும் பொதுவான சாலை. யாரும் அந்த சாலையில் செல்லக் கூடாதா? நான் அந்தப் பாதையில் செல்லும் போது பாஜகவினர் அங்கு இருப்பார்கள் என்று எனக்கு எப்படி தெரியும்?
எங்கள் மடியில் கனமில்லை. நாங்கள் எதற்கும் பயப்படத் தேவை இல்லை. பாஜகவினர் பிள்ளை பிடிப்பவர்களைப் போல அலைகின்றனர். பிள்ளை எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் நிலைமை. நான் இப்போது ஒன்றை கூறுகிறேன். பாஜகவில் இருந்த எம்எல்ஏக்கள் இருவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளனர்.
இன்றைய தினம், பாஜக எம்எல்ஏக்கள் இருவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணையப் போகின்றனர். இதை நகைச்சுவைக்காக கூறவில்லை, உண்மை. அந்த இருவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
இந்தியாவில் எந்தவொரு கட்சியும் தனித்து நின்ற சரித்திரம் இல்லை. அதிமுக மட்டும்தான், 2016-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றோம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நேற்று (பிப் 26) நடைபெற இருப்பதாகவும் பாஜகவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கவில்லை. இந்த நிகழ்வில் அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.