மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக – பாமக இடையே கூட்டணி உறுதியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுர தோட்டத்தில் ராமதாஸை நேரில் சந்தித்துப் பேசினார். எனவே, வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாமக அதிமுகவில் இணைய முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தவிர, பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் மத்திய அமைச்சர் பதவியைப் பாமக தரப்பு கோரியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு பாஜக தரப்பு ’நோ’ சொன்னதால் அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகியிருப்பதாக தகவலும் சொல்லப்படுகிறது.
பாமக கேட்கும் தொகுதிகள் என்னென்ன? – கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி, விழுப்புரம் (தனி), அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியது. இம்முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி ), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஆனால், 2014-ம் ஆண்டில் போட்டியிட்ட மக்களவைத் தொகுதிகளைத்தான் பெருவாரியாக ஒதுக்கச் சொல்லி இம்முறை கேட்டுள்ளது பாமக. குறிப்பாக, 2014 தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு அன்புமணி வெற்றிப் பெற்றார். மேலும் அரக்கோணம் , ஆரணி, சிதம்பரம் (எஸ்சி) ,கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் (தனி) ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிட்டிருந்தது. 2014-ம் ஆண்டு போட்டியிட்ட 4 தொகுதிகளை மீண்டும் ஒதுக்கக் கேட்டிருக்கிறது.
2014-ம் ஆண்டில் இரண்டு தனித் தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. தற்போது அந்த ரூட்டைக் கையிலெடுத்துள்ளது. ஆனால், சிதம்பரம் தொகுதியில் மீண்டும் திருமாவளவன் களமிறங்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில் பாமக அங்கு போட்டியிடுவது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கேள்வியாகவுள்ளது. இதனால், பாமக – விசிக இடையே ’டஃப் ஃபைட்’ இருக்கும். ஆனால், பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்குமா என்பது கேள்வியே.
அரசியல் சூழலில் இன்றும் பாமக மீது சாதி கட்சி என்னும் நீங்காத களங்கம் இருக்கும் நிலையில், தனித் தொகுதியில் போட்டியிட்டு அதைத் துடைக்க பாமக திட்டமிட்டு இருக்கிறது. கடந்த முறையும் ஒரு தனித் தொகுதியைக் கேட்டுப்பெற்றது. இம்முறை இரண்டு தனித் தொகுதிகளைக் கேட்டுள்ளது. ஆனால், பாமகவின் இந்த அணுகுமுறைக்கு அதிமுக கைகொடுமா, ஒப்புதல் அளிக்குமா என்பது சில நாட்களில் தெரியவரும்.