திருப்பூர் / கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் இன்று ( பிப். 27 ) நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு பயணத்தை ஒட்டி, பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேடையை சுற்றி பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, அண்ணாமலை ஆகியோரின் முழு உருவ கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுக் கூட்டத்துக்காக, தாராபுரத்தில் இருந்து கொடுவாய் – அவிநாசி பாளையம் – சுங்கம் மார்க்கமாக திருப்பூர் செல்லக்கூடிய கனரக வாகனங்களும், திருப்பூர் மாநகரில் இருந்து தாராபுரத்துக்கு சுங்கம் நான்கு சாலை வழியாக வரும் கனரக வாகனங்களும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த வழியாக செல்ல அனுமதி இல்லை.
அதேபோல், கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் சிந்தாமணிப் புதூர், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவிநாசி, பெருமாநல்லூர், செங்கப்பள்ளி, பெருந்துறை, திண்டல், கணபதிபாளையம், கொடுமுடியாக வழியாக செல்ல வேண்டும்.
பல்லடம் வழியாக மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நான்கு சாலை, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் வழியாக செல்ல வேண்டும். திருச்சி கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் கொடுமுடி கணபதிபாளையம், திண்டல், பெருந்துறை, செங்கப்பள்ளி, பெருமாநல்லூர், அவிநாசி, கருமத்தம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
திருச்சி, கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர்பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், தாராபுரம், குடிமங்கலம், பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கேரளா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், அமராவதி ரவுண்டானா, உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து பல்லடம், திருப்பூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், குடிமங்கலம் நான்கு சாலை, தாராபுரம், அவிநாசிபாளையம் வழியாக செல்ல வேண்டுமென, திருப்பூர் மாவட்ட போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இலகு ரக வாகனங்கள்: அதேபோல், கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் சூலூர், கலங்கல், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், வாவிபாளையம், புத்தரச்சல், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை செல்லும் இலகுரக வாகனங்கள், காங்கயம், படியூர், திருப்பூர், அவிநாசி வழியாகவும், திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் வெள்ளகோவில், காங்கயம், ஊதியூர், தாராபுரம், குடிமங்கலம் நான்கு சாலை வழியாகவும் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம் சூலூருக்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கும் பிரதமர் இன்று வருவதையொட்டி, கோவையில் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கனரக வாகனங்களுக்கு மட்டும் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பாலக்காட்டிலிருந்து வாளையாறு வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் வழியாக செல்ல வேண்டும்.
கோவை மாநகரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் வழியாக செல்ல வேண்டும். கோவை மாநகர் சிங்கா நல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, எல் அன்ட் டி பைபாஸ் சாலை, பட்டணம் பிரிவு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் வழியாக செல்லலாம்.