மதத்தை அவமதித்துவிட்டார்; அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற பெண்ணை சூழ்ந்த கும்பல் – அதிர்ச்சி சம்பவம்

லாகூர்,

இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மதக்கடவுள், புத்தகம் குறித்து அவதூறு தெரிவிக்கும்வகையில் பேசினால் மரண தண்டனை விதிக்கும் வகையில் மதநிந்தனை சட்டம் அமலில் உள்ளது. மேலும், மதத்தை அவமதித்துவிட்டனர் என கூறி அப்பாவி மக்களையும் தாக்கி கொல்லும் கும்பல் தாக்குதல் சம்பவங்களும் பாகிஸ்தானில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் தனது கணவருடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்திற்கு சென்றுள்ளார். அந்த பெண் அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்தார். அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் ‘ஹல்வா’ (அழகு அல்லது இனிப்பு என பொருள்) என அரபு மொழியில் அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த பெண் அணிந்திருந்த ஆடையில் இஸ்லாமிய மதப்புத்தகமான குர்ஆனில் உள்ள வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக உணவகத்தில் இருந்தவர்கள் தவறுதலாக நினைத்துள்ளனர். அப்பெண் இஸ்லாமிய மதத்தை அவமதித்துவிட்டதாக விமர்சித்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்களுக்கு தெரியவர அந்த உணவகம் முன் நூற்றுக்கணக்கானோர் கும்பலாக திரண்டு அப்பெண்ணை மிரட்டினர். இதனால் அப்பெண் மிகுந்த அதிர்ச்சியும், பயமுமடைந்தார்.

இஸ்லாமிய மதத்தையும், மத புத்தகத்தையும் அப்பெண் அவமதித்துவிட்டதாகவும் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமெனவும் அந்த கும்பல் கோஷம் எழுப்பியது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அப்பெண்ணை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குர்ஆன் வசனம் இடம்பெற்ற ஆடையை தான் அணியவில்லை எனவும், ஆனாலும் நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் இதுபோன்று இனி நடக்காது என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.