லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கட்சி மாறி வாக்கு ஊகங்களால், சமாஜ்வாதி கட்சியின் கொறடா மனோஜ் குமார் பாண்டே இன்று (செவ்வாய்) காலை தனது கொறடா பதவியை ராஜினா செய்துள்ளார். இவர் ரேபரேலி மாவட்டத்தின் உஞ்சகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராவார்.
முன்னதாக, மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தயாசங்கர் சிங்கை மனோஜ் குமார் சந்திக்கச் சென்றார். அப்போது அவர் கூறுகையில், “கொறடா பதவியிலிருந்து விலகும் எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் படி கட்சித் (சமாஜ்வாதி கட்சி) தலைமையிடம் கேட்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
மனோஜ் குமாரின் சந்திப்புக்கு பின்னர் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் தயாசங்கர் சிங், “பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட பலர் பாஜகவில் இணைந்து கொண்டிருக்கின்றனர். மனோஜ் பாண்டே எப்போதுமே சனாதனத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார். இதுகுறித்த சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதனால் அவர் அங்கு மகிழ்ச்சி இல்லாமலே இருந்தார். ராமரை தரிசிக்க அழைப்பு வந்தபோது அனைவரும் ராமரை தரிசிக்கச் செல்லவேண்டும் என்று அவர் விரும்பினார்” என்று தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கட்சி கூறியதற்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “இதற்கு நான் கட்சி மீது கோபமாக இருக்கிறேன் என்பது அர்த்தமில்லை, ஆனாலும் வாக்களிப்பதற்கு முன்பாக எனது மனசாட்சியின் குரலுக்கு செவி சாய்ப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறுகையில், “பாஜகவின் 8 வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ராஜா பையா மற்றும் எங்கள் கூட்டணிக்கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவளிக்கிறோம். சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏகள் வெளிப்படையாகவே பாஜகவுக்கு வாக்களிக்க சம்மதித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியினர் கட்சி மாறி வாக்களிக்க உள்ளனர். அவர்கள் 100 சதவீதம் என்டிஏ கூட்டணியை ஆதரிக்கின்றனர அங்கு கட்சி மாறி வாக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “எங்கள் கட்சியின் 3 உறுப்பினர்களும் வெற்றி பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜக அனைத்து யுக்திகளையும் கையாளுகிறது. வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் பாஜக செய்யும். சொந்த லாபத்தை விரும்பும் எங்கள் கட்சித் தலைவர்கள் சிலர் பாஜகவுக்குச் செல்லலாம் என்று தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் ஷிவ்பால் சிங் யாதவ், “இதுபோல சம்பவங்கள் நடந்தால் ஜனநாயக மதிப்புகள் முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்திருந்தார். சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர சவுத்ரி, “சமரசமற்ற தேர்தல் நடைமுறைகளே ஜனநாயகத்தை வலுப்படுத்தும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் ஜனநாயகத்தின் ஆதரவாளர்களாக இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.