ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகேயுள்ள அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். ‘மக்கள் தேசம்’ என்ற ஒருக் கட்சியில், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த விவேகானந்தன் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கட்டப்பஞ்சாயத்து, ரௌடிசம், சமூக ரீதியான மோதல்களிலும் விவேகானந்தனின் தலையீடு, பின்னணி இருந்திருக்கிறது என்கிறது காவல்துறை.
இந்த நிலையில், கடந்த மாதம் 31-ம் தேதி இரவு ஒன்பது மணியளவில், சுமைதாங்கி ஏரிக்கரைப் பகுதி வழியாக டூவீலரில் சென்ற விவேகானந்தனை காரில் பின்தொடர்ந்துவந்த பதினோரு பேர்கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது.
வலது கையை மணிகட்டுடன் துண்டித்ததோடு… விவேகானந்தனின் முகத்தையும் அடையாளம் காண முடியாத அளவுக்கு அரிவாளால் வெட்டிச் சிதைத்துவிட்டுத் தப்பினர். பழிக்குப் பழியாக இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருந்ததும், விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கொலையாளிகள் பதினோரு பேரையும் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், கொலையாளிகள் முருகன், பிரபாகரன், சண்முகம் என்கிற வினோத், சுரேஷ், குமார், சூரியா, ராஜேஷ், சந்துரு, தாமோதரன், கோபி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வராதபடி ஓராண்டுக்கு ‘குண்டர்’ தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.