புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலர் பாதுகாவல் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உக்ரைனுடனான எல்லையில் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து சண்டையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய சில இந்தியர்கள் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான போர் பகுதியிலிருந்து இந்தியர்கள் விலகி இருக்குமாறு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் ஏற்கெனவே கேட்டுக்கொண்டார்.