பார்சிலோனா: இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் – 2024’-ல் இது குறித்த தகவலை குவால்காம் நிறுவன பொது மேலாளர் (ஹேண்ட்செட்ஸ்) கிறிஸ் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கீபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள 2ஜி போன் பயனர்களை 5ஜி போன் பயனர்களாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பட்ஜெட் விலையில் 5ஜி போனை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். இதற்காக குவால்காம் நிறுவனம் லேட்டஸ்ட் சிப்செட்டை வடிவமைக்க உள்ளதாகவும் தகவல். இந்திய பயனர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினை ஆய்வு செய்த நிலையில், இந்த சிப்செட்டை குவால்காம் வடிவமைப்பதாக தகவல். இது இந்தியாவில் புதிய 5ஜி மொபைல் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் அதிவேக இணைய இணைப்பு வசதியை பெறுவதோடு இதர பயன்களுக்கும் வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.