ராகுல் காந்தி எம்பியாக உள்ள வயநாடு தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்னும் கேள்வி எழுந்துள்ளது.
வயநாட்டில் ராகுல் போட்டியில்லையா? – கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ்தான் வெற்றிப் பெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், உத்தரப் பிரதேசம் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிதி இரானியிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால், கேரள மாநில வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானது.
மக்களவைத் தேர்தல் 2024-ஐ ஒட்டி எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. இதில் அனைத்து மாநிலங்களிலும் கட்சிகள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், கேரளாவில் காங்கிரஸ் தனித்து களம் காணவிருக்கிறது.
இதனால், கேரள மாநிலத்தில் ‘இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி’யுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. அந்தக் கூட்டணி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில்தான் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக ஆனி ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவிதான் ஆனி ராஜா. இவர் இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
கேரளாவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வயநாடு தொகுதியை ஒதுக்கக் கோரிக்கை வைக்கிறது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியில் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள பழமையான கட்சி. எனவே, அந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக ராகுல் காந்தி நேரடியாகப் போட்டியிட விருப்பமில்லை. இந்தக் காரணங்களுக்காக ராகுல் காந்தி வயநாட்டு தொகுதியில் போட்டியிட மாட்டார் என சொல்லப்படுகிறது.
எனவே, ’ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் ஓர் இடத்திலும், தென்னிந்தியாவில் தெலங்கானா அல்லது கர்நாடகத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார்’ என சொல்லப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் அமேதி தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட ராகுல் காந்திதான் வெற்றிப் பெற்றார். ஆனால், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அந்த இடத்தைக் கைப்பற்றியது. எனவே, மீண்டும் அந்தத் தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதேநேரம், சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரின் கோட்டையாக விளங்கும் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுவாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்னும் கருத்தும் சொல்லப்படுகிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி எங்கு போட்டியிடுவார் என்பது விரைவில் தெரியவரும்.
இடதுசாரிகள் சொல்வது என்ன? – மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறும்போது, “வயநாடு தொகுதிக்கான தனது வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா அத்தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர், ஒட்டுமொத்த இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக களம் காண இருக்கிறார். எனவே, ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பாஜகவுக்கு எதிராக தேர்தலை எதிர்கொள்வதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளை காங்கிரஸ் எதிர்க்குமானால், அது என்ன மாதிரியான செய்தியாக இருக்கும்? எனவே, அந்தத் தொகுதி குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார் பிருந்தா காரத்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் கூறும்போது, “வயநாட்டில் ராகுல் காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின்போது அது பாஜகவை எதிர்க்கிறதா அல்லது இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்க்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பாஜகவை எதிரியாகக் கருதும் பட்சத்தில் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில்தான் களம் காண வேண்டும். இங்கே கேரளாவில் பாஜகவுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இண்டியா கூட்டணியில் உள்ள எங்களுடன் மோத இந்தி இதயப்பகுதியான உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெரிய போரை ராகுல் காந்தி கைவிடுவது சரியாக இருக்காது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் ஞானத்துடன் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.