புதுடெல்லி: வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வயநாடு தொகுதிக்கான தனது வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா அத்தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர், ஒட்டுமொத்த இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக களம் காண இருக்கிறார். எனவே, ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பாஜகவுக்கு எதிராக தேர்தலை எதிர்கொள்வதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்க்குமானால், அது என்ன மாதிரியான செய்தியாக இருக்கும்? எனவே, அந்தத் தொகுதி குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இண்டியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உ.பி.யின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் ஸ்மிருதி இராணியிடம் அவர் தோல்வியுற வயநாட்டில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இந்த முறை வயநாட்டில் வலுவான வேட்பாளராக ஆனி ராஜாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவிதான் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.