33 பந்துகளில் சதமடித்து மிரள விட்ட நமீபியா வீரர் – தம்பி யாருப்பா நீ? ரோகித் ரெக்கார்டு ஓவர்

நேபாளத்தில் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் நமீபியா, அயர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் நேபாளம் மற்றும் நம்பீயா அணிகளுக்கு இடையே கிர்திபூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நமீபியா இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மாலன் கருகர் மற்றும் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நமீபிய அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 

ஜான் நிகோல் அபார சதம்

குறிப்பாக ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் பறக்கவிட்டார். இதனால் அவர் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவருடைய இந்த சதம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமாக பதிவானது. அத்துடன் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற பெருமையையும் ஜான் நிக்கோல் லோப்டி ஈட்டன் பெற்றார். அத்துடன் டி20 போட்டிகளில் 40 பந்துகளுக்குள் சதம் அடித்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ஈட்டன் பெற்றார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக 34 பந்துகளில் டி20 சதம் அடித்த நேபாள வீரர் குஷால் மல்லாவின் சாதனையையும் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் முறியடித்தார். 2017ம் ஆண்டு 35 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்திய குஷால் மல்லாவுக்கு அடுத்தபடியாக, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். நான்காவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அவர் 2017 ஆம் ஆண்டு 20 ஓவர் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்தார். 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரராகவும் உள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:

ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் (நமீபியா) – 33 பந்துகளில் சதம் (2024)
குஷால் மல்லா (நேபாளம்)- 34 பந்துகளில் சதம் (2023)
டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) – 35 பந்துகளில் சதம் (2017)
ரோஹித் சர்மா (இந்தியா) – 35 பந்துகளில் சதம் (2017)

ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் 36 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நமீபிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மற்றொரு வீரர் மலான் கருகர் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய நேபாள அணி 18.5 ஓவரில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. முத்தரப்பு தொடரில் நமீபிய அணி முதல்வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.