பெங்களூரு : கர்நாடக மாநில அரசு சார்பில், முதன் முறையாக மெகா வேலை வாய்ப்பு முகாம் நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே 80,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கர்நாடக திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், பெங்களூரு அரண்மனையில் இரண்டு நாட்களுக்கான மாநில அளவிலான மெகா வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கிவைத்து பேசியதாவது:
படித்து விட்டு வேலை இல்லாதவர்களுக்கு ‘யுவநிதி’ திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்துடன், வேலை வாய்ப்பு ஏற்படுத்த, அவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சியும் அளிக்கப்படும்.
புது புது வேலை வாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் ஆண்டுதோறும் 9.32 லட்சம் பேர் இரண்டாம் பி.யு.சி.,யும்; 62,437 பேர் தொழில் படிப்பும்; 48,153 பேர் பாலிடெக்னிக் படிப்பும்; 4.80 லட்சம் பேர் பட்டப்படிப்பும் முடிக்கின்றனர்.
இந்த முகாம் மூலம், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இங்கு, 1.10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளன. 600க்கும் அதிகமான நிறுவனங்கள் வந்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், துறை நிர்வாக இயக்குனர் கனகவல்லி, தேசிய வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ராகபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல் நாளான நேற்று, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 80,000த்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அனைவருக்கும், மதிய உணவு, குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தன.
மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்வதற்க்கு சிறப்பு கவுன்டர்கள் உள்ளன. ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களும், இங்கேயே நேரில் வந்து பதிவு செய்யலாம். இன்றும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்