புதுடில்லி :உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ள, மிக பிரமாண்டமான, 150 அடி நீள, ‘ரெடிமேட்’ பாலம், ராணுவத்தில் நேற்று சேர்க்கப்பட்டது.
அவசர கால பணிகள் மற்றும் ராணுவம் தொடர்பான பணிகளின்போது பயன்படுத்துவதற்காக, பிரமாண்ட ரெடிமேட் பாலம் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 46 மீட்டர், அதாவது, 150 அடி நீளமுள்ள ரெடிமேட் பாலத்தை வடிவமைத்துள்ளது.
இதை தயாரிக்கும் ஒப்பந்தம், ‘எல் அண்டி டி’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
மொத்தம், 2,585 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, 41 செட் பாலங்களை அந்த நிறுவனம் தயாரிக்கும்.
இதன் முதல் பாலம், ராணுவத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவிடம், இந்த பாலத்தை எல் அண்ட் டி நிறுவனம் ஒப்படைத்தது.
கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றை கடப்பதற்கு, இந்த ரெடிமேட் பாலத்தை பயன்படுத்த முடியும்.
ஒரே பிரிவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை, எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்ல முடியும். வேகமாக நிர்மாணிக்க முடியும்.
மேலும், வேகமாக அதை பிரித்து எடுத்துச் செல்ல முடியும்.
எந்த பருவநிலையையும் தாங்கக் கூடிய வகையில், அதிக எடை தாங்கும் திறனுடன் இந்த ரெடிமேட் பாலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு செட் என்பது, ரெடிமேட் பாலத்தின் பகுதிகளை சுமந்து செல்லும் ஏழு பிரமாண்ட டிரக்குகள் மற்றும் அதை நிறுவக் கூடிய கிரேன் உள்ளிட்டவை அடங்கிய இரண்டு டிரக்குகளும் அடங்கும்.
அடுத்த ஐந்து ஆண்டு களுக்குள் மீதமுள்ள ரெடிமேட் பாலங்களும் தயாராகிவிடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்