“மருத்துவத்துறையில் எய்ம்ஸ் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவிருப்பதன் மூலம் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் உயர்தர மருத்துவ வசதி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மதுரை முதல் காஷ்மீர் வரை கவுகாத்தி முதல் குஜராத் வரை எங்கும் எல்லா மூலைகளுக்கும் எய்ம்ஸ் மூலம் உயர்தர மருத்துவ வசதி எடுத்துச் செல்லப்படுகிறது.”
5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையின் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு பிரதமர் மோடி இப்படிப் பேசியிருந்தார். அவர் சொன்னது போலவே குஜராத்திலும் கவுகாத்தியிலும் எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஏன், காஷ்மீரில் கூட எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி திறந்து வைத்துவிட்டார். ஆனால், மதுரை எய்ம்ஸ் மட்டும் அடிக்கல் நாட்டப்பட்டதோடு அப்படியே நிற்கிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக மோடி தமிழகம் வந்த சமயத்தில்தான் எய்ம்ஸூம்கான அடிக்கல்லை நாட்டியிருந்தார். இப்போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் தமிழகத்திற்கு வருகிறார். திருப்பூரின் பல்லடத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் மதுரை எய்ம்ஸ் சார்ந்து எந்த முன்னேற்றமும் இல்லை. தற்காலிக வளாகத்தில் வைத்து மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறதே தவிர தோப்பூரில் மருத்துவமனை கட்டடம் எழுப்பப்படவே இல்லை.
அதேநேரத்தில், மதுரை எய்ம்ஸோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பணிகளெல்லாம் நிறைவு பெற்று பெரும்பாலும் செயல்பாட்டுக்கே வந்துவிட்டன. மறைந்த அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்த போது 2015-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்தான் மதுரை எய்ம்ஸூக்கான அறிவிப்பும் வெளியானது.
அப்போது மதுரையோடு சேர்த்து இமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், அசாம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்தப் பட்டியலில் தமிழகத்தையும் பீகாரையும் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் எய்ம்ஸூக்கான கட்டுமான பணிகளெல்லாம் முழுமையாக முடிந்து பிரதமர் மோடி திறப்பு விழாவே நடத்திவிட்டார்.
இமாச்சலின் பிலாஸ்பூரில் 2017-ல் அக்டோபர் 3-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு 2022 – அக்டோபர் 5-ம் தேதி திறப்பு விழா நடத்தப்பட்டது. அசாமின் கவுஹாத்தியில் 2017-ல் மே 26-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2023-ல் ஏப்ரல் 14-ல் திறப்பு விழா நடத்தப்பட்டுவிட்டது. பஞ்சாப்பின் பதிண்டாவில் 2016-ல் நவம்பர் 25-ல் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்புதான் திறப்பு விழா நடந்து முடிந்திருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட அதே 2019-ம் ஆண்டில்தான் ஜம்மு & காஷ்மீரின் விஜய்பூரிலும் அடிக்கல்கள் நாட்டப்பட்டன. கடந்த 20-ம் தேதி அங்கேயும் திறப்பு விழாவை முடித்துவிட்டார் மோடி.
2015 பட்ஜெட்டில் அறிவித்ததைப் போலவே 2014 பட்ஜெட்டில் 4 எய்ம்ஸூக்களுக்கான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டிருந்தார். நாக்பூர், கோரக்பூர், மங்கள்கிரி, கல்யாணி என இந்த நான்கு இடங்களிலும் எய்ம்ஸின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
மதுரை எய்ம்ஸூக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட குஜராத், ஜார்க்கண்ட் மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளே திறப்பு விழா கண்டுவிட்டன.
2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்தான் குஜராத், ஜார்க்கண்ட் எய்ம்ஸ்களுக்கான அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிட்டார். ஜார்க்கண்ட் எய்ம்ஸ் மருத்துவமனை 2022 ஜூலையிலேயே திறக்கப்பட்டுவிட்டது. குஜராத்தின் ராஜ்கோட் எய்ம்ஸ் இரண்டு தினங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது.
ராஜ்கோட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியில்தான் ராஜ்கோட், பதிண்டா, ரேபரேலி, கல்யாணி, மங்கள்கிரி என மொத்தமாக 5 எய்ம்ஸ்களை மோடி திறந்து வைத்திருந்தார். திறப்பு விழா நடத்திய கையோடுதான் இன்று தமிழகத்திற்கு வருகிறார்.
மதுரை எய்ம்ஸூக்கான அறிவிப்பு வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கப்பெற்று 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1978 கோடி ரூபாய் என பட்ஜெட் மறுவரையறை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜப்பானின் நிதியுதவியுடன் கட்டப்படும் என்றார்கள். ஆனால், இன்னமும் சுற்றுச்சுவரை தவிர எதையும் கட்டவில்லை. இன்னும் சில மாதங்களில் பணிகள் தொடங்கும். 2027-ல் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸைத் திறந்து வைப்பார் என சமீபத்தில் மாநில விவகாரங்களுக்கான மத்திய மருத்துவத்துறை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகெல் உறுதியளித்திருக்கிறார்.
ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை. `எப்போ வருமோ மதுரை எய்ம்ஸ்?’ என்பதுதான் தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் வரும் பிரதமர் மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பாரா?